மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் தேவைக்காக குழாய் மூலம் பாலாற்று குடிநீர் கொண்டு வர பரிசீலிக்கப்படும்
சுற்றுலா வரும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாமல்லபுரத்திற்கு குழாய் மூலம் பாலாற்று குடிநீர் கொண்டுவர பரிசீலிக்கப்படும் என்று பேரூராட்சிகள் துறை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் உலக புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை கண்டுகளிக்க நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் இங்குள்ள வெண்புருஷம், பூஞ்சேரி, தேவனேரி, சாவடி மற்றும் மாமல்லபுரம் நகர பகுதி என குறிப்பிட்ட பகுதிகளில் மொத்தம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தணணீர் ஏற்றி தெருக்குகுழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
அதேபோல் மாமல்லபுரம் பேரூராட்சி வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய குடிநீர் சுத்திகரிப்பு மையமும் செயல்படுகிறது.
இந்த நிலையில் பேரூராட்சி பகுதியின் வருங்கால வளர்ச்சிக்கு ஏற்ப குடிநீர் தேவை அதிகப்படுத்த வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து தமிழக பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ் நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது வாயலூர் பாலாற்று பகுதியில் இருந்து இப்பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவது குறித்து மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், பேரூராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினர்.
பின்னர் இதுகுறித்து மாமல்லபுரம் பேரூராட்சி மன்றத்தை கூட்டி தீர்மானம் இயற்றும்படி கூறிய ஆணையர், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த திட்டம் பற்றி பரிசீலித்து நடைமுறைபடுத்துவதாக உறுதி அளித்தார்.