மாடம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றி கால்வாய்கள் சீரமைப்பு
மாடம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றி கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த மழைக்காலங்களில் வள்ளலார் நகர், குத்தனூர், தாய்மூகாம்பிகை நகர், மாணிக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது வட கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாடம்பாக்கம் ஊராட்சியில் மழைநீர் செல்லும் கால்வாய்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் வள்ளலார் நகர், தாய் மூகாம்பிகை நகர், மாணிக்கபுரம், சதசிவம் நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கால்வாயை சீரமைத்து தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனிடம் முறையிட்டனர். இதையடுத்து அவர் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றி கால்வாய்கள் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வள்ளலார் நகர், தாய் மூகாம்பிகை நகர் பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாய்களை சீரமைத்து சிமெண்டு குழாய்கள் அமைக்கும் பணியும் மாணிக்கபுரம், குத்தனூர், லட்சுமி நாராயணபுரம், கார்த்திக் நகர், சதாசிவம் நகர், பாரதி நகர், உளிளிட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் கால்வாய்களை சீரமைத்து மழைநீரை வெளியேற்றி ஆதனூர் பகுதியில் உள்ள அடையாறு துணை கால்வாயில் மழை நீர் சென்றடையும் வகையில் பணி நடந்து வருகிறது.