குடியாத்தம் வி.டி.பாளையம் கிராமத்தில் விளை நிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்


குடியாத்தம் வி.டி.பாளையம் கிராமத்தில்  விளை நிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
x
வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் வி.டி.பாளையம் கிராமத்தில் விளை நிலங்களுக்குள் புகுந்து யானகைள் அட்டகாசம் செய்தது. இதில் பயிர்கள் சேதமடைந்தன.

யானைகள் கூட்டம்

குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர மாநில எல்லைப் பகுதியை ஒட்டியபடி உள்ளது. ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப்புறங்களில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.

வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு இடையே கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு விரட்டிவிட்டனர். கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை சற்று குறைந்திருந்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்த 20 யானைகள் கொண்ட கூட்டத்தை ஆந்திர வன ஊழியர்கள் தமிழக வனப்பகுதியை நோக்கி சில நாட்களுக்கு முன் விரட்டியுள்ளனர்.

விளைநிலங்கள் சேதம்

குடியாத்தம், அடுத்த வி.டி.பாளையம் கிராமம் ஆந்திர மாநில வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது. கடந்த சில தினங்களாக யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் 7 யானைகள் கொண்ட கூட்டம் வி.டி.பாளையம் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகே முகாமிட்டு பிளிறியபடி இருந்தது இதனால் அச்சமடைந்த மக்கள் வெளியில் வர பயந்து கொண்டு வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.

2 மணி நேரமாக அந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்தியது. ஏராளமான மாமரங்கள், வாழை மரங்கள், தென்னை மரங்கள், நெற்பயிர்கள், தீவனப் பயிர்களை நாசம் செய்தது. இதனால் பல ஆயிரம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தன.

இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் கிராம மக்கள், விவசாயிகள் துணையுடன் யானைகளை பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் அடர்ந்த ஆந்திர காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

வீடுகளில் முடங்கும் மக்கள்

அடிக்கடி இப்பகுதிக்குள் மாலை நேரங்களில் யானைகள் கூட்டமாக வருவதால் கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர், மாலை நேரத்தில் கிராம மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் பல மாதங்களாக யானைகள் தொல்லை இல்லாமல் இருந்தது ஆந்திர மாநில வனப்பகுதியில் யானைகள் கூட்டம் முகாமிட்டு இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள தமிழக பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்த சம்பவங்களால் விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

யானைகளை அடர்ந்த ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டப்படாவிட்டால் இப்பகுதி விவசாயிகள் அரசியல் கட்சிகள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபடவும், உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.


Next Story