கொள்ளிடத்தில், விவசாயிகள் சாலை மறியல்


தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி கொள்ளிட்டத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி கொள்ளிட்டத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி கொள்ளிடம் கடைவீதியில் சிதம்பரம்- சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

இந்த போராட்டத்தில் சிதம்பரம்-சீர்காழி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக விவசாயிகள் கொள்ளிடம் காளீஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.பின்னர் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் விளைநிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு முற்றிலும் அழிந்துவிட்டன. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

வேதனை அளிக்கிறது

அரசு எந்த அறிவிப்பும் கொடுக்காமல் மவுனம் காத்து வருவது வேதனையை அளிக்கிறது. மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து இழப்பீடு வழங்கவும், பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு முழு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், பி. ஆர்.பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சருக்கு பரிந்துரை

அப்போது மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கக்கோரி முதல்-அமைச்சருக்கு பரிந்துறை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story