காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன
x

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

காஞ்சிபுரம்

விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காஞ்சீபுரம் ரங்கசாமி குளம், காந்தி சாலை, என்.கே.டி.தெரு, பாண்டவ தூதபெருமாள் சன்னதி தெரு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதிக்கு நேற்று எடுத்து வரப்பட்டன.

இந்து முன்னணி காஞ்சீபுரம் கோட்ட செயலாளர் ஆர்.டி.மணி தலைமையில் மேள வாத்தியங்களுடனும் விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது.

இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊர்வலமானது காந்திசாலை, காமராஜர்சாலை, கச்சபேசுவரர் கோவில் வழியாக வந்து கங்கை கொண்டான் மண்டபத்தில் நிறைவு பெற்றது.

மாமல்லபுரம்

இதையடுத்து மாமல்லபுரம் கடலில் சிலைகள் கரைக்கப்பட்டது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தினார்கள். இந்த சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீசார் அனுமதி வழங்கினார்கள். இதையடுத்து நேற்று காலை 11 மணி முதல் ஒவ்வொரு சிலையாக எடுத்து வந்து கடலில் கரைத்தனர்.

இதையொட்டி மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மாமல்லபுரம் கடற்கரை பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிலை கரைக்க வந்த நபர்களை மாமல்லபுரம் கடலில் குளிக்க அனுமதிக்கவில்லை. மாமல்லபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் 4000 தண்ணீர் பாட்டில்களை இலவசமாக வழங்கி உபசரித்தனர்.

காட்டாங்கொளத்தூர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கூடுவாஞ்சேரிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து இந்து முன்னணி சார்பில் பாலவாக்கம் கடற்கரையில் கரைப்பதற்காக இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் ஊர்வலமாக சென்றது. இதில் இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி செந்தில் குமார், பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஜி.சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் வழிபட்ட விநாயகர் சிலைகள் நேற்று கடப்பாக்கம், தழுதாலாளி குப்பம், வெண்ணங்குபட்டு, முகையூர் போன்ற இடங்களில் கடலில் கரைக்கப்பட்டது. இந்து முன்னணி சார்பில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இடைக்கழிநாடு, மதுராந்தகம், லத்தூர், அச்சரப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடப்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story