கல்லணை பள்ளிக்கூடத்தில் மேயர் சரவணன் ஆய்வு


கல்லணை பள்ளிக்கூடத்தில் மேயர் சரவணன் ஆய்வு
x

நெல்லை டவுன் கல்லணை பள்ளிக்கூடத்தில் மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கூடங்கள் வருகிற 7-ந ்தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தொடர்ந்து மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம், மாநகராட்சி பொதுக்கல்வி நிதி ரூ.51 லட்சம் என ரூ.81 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிதாக கட்டப்பட்ட கழிப்பிட கட்டுமான பணி உள்ளிட்ட பணிகளை மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி திறப்பதற்கு முன்பாக வகுப்பறைகளை சுத்தமாக வைக்கவும், மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பைஜூ, இளநிலை பொறியாளர் விவேகானந்தன், சுகாதார அலுவலர் இளங்கோ, கவுன்சிலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story