போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு


போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
x

சீட்டு நடத்தி பணம் மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீட்டு பணம் மோசடி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக மாத சீட்டு நடத்தி வந்து உள்ளார். அப்போது அவர் களம்பூர், கஸ்தம்பாடி, ஆரணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் ரூ.3 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் என மாத சீட்டு கட்டி வந்துள்ளனர். சீட்டு முடிந்த பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்து உள்ளார்.

இதுகுறித்து கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் களம்பூர் போலீஸ் நிலையத்திலும், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.

இருப்பினர் அவர் சீட்டு பணம் முடிந்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு வந்து உள்ளார். தொடர்ந்து அவர்கள் திருவண்ணாமலை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் கடந்த நவம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தும் மாத சீட்டு கட்டி பாதிக்கப்பட்ட தங்களுக்கு பணத்தை மீட்டு தராமலும், மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்யாமலும் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறி சீட்டு பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி சாலையில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த வழக்கு போலீசாரின் விசாரணையில் இருக்கும் போது இதுபோன்று போராட்டம் நடத்த கூடாது. இதனால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, பணத்தை விரைந்து மீட்டு கொடுக்க வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


Next Story