ஈரோடு மார்க்கெட்டுகளில்மஞ்சள் விலை தொடர் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைகுவிண்டால் ரூ.12,859-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டுகளில் தொடர்ந்து மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஈரோடு மார்க்கெட்டுகளில் தொடர்ந்து மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.12 ஆயிரத்து 859-க்கு விற்பனை ஆனது.
மஞ்சள் விலை வீழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிற மற்ற நாட்களில் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு அதிகபட்சமாக கடந்த மாதம் 11-ந்தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15 ஆயிரத்து 422-க்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து மஞ்சள் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.
கடந்த மாதம் 30-ந்தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.13 ஆயிரத்து 859-க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் மேலும் விலை குறைந்து ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.12 ஆயிரத்து 859-க்கு விற்பனை ஆனது. அதாவது கடந்த 5 நாட்களில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,000 வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விவசாயிகள் 596 மூட்டைகளில் மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 536-க்கும், அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 511-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 55-க்கும், அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 511-க்கும் ஏலம் போனது. 146 மூட்டை மஞ்சள் விற்பனை ஆனது.
விவசாயிகள் கவலை
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு 1,110 மூட்டைகளில் மஞ்சள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து 6-க்கும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 859-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 569-க்கும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்தும் ஏலம் போனது. மொத்தம் 484 மூட்டை மஞ்சள் மட்டுமே விற்பனை ஆனது.
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைக்கூடத்துக்கு 271 மூட்டைகளில் மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து 299-க்கும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 855-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 259-க்கும், அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 389-க்கும் ஏலம் போனது. மொத்தம் 264 மஞ்சள் மூட்டைகள் விற்பனை ஆனது. கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு விவசாயிகள் யாரும் மஞ்சளை விற்பனைக்கு கொண்டுவரவில்லை. தொடர்ந்து மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.