ஈரோடு மாவட்டத்தில் 1,700 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா அமைச்சா் முத்துசாமி தகவல்


ஈரோடு மாவட்டத்தில் 1,700 கர்ப்பிணிகளுக்கு   சமுதாய வளைகாப்பு விழா  அமைச்சா் முத்துசாமி தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2023 2:06 AM IST (Updated: 18 Oct 2023 2:07 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 1,700 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சா் முத்துசாமி தொிவித்தாா்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 1,700 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு உள்ளது என அமைச்சர் முத்துசாமி கூறினார்.

சமுதாய வளைகாப்பு விழா

சென்னிமலை அருகே வெள்ளோட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ப.செங்கோட்டையன், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஐ.பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

1,700 கர்ப்பிணிகள்

விழாவில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 70 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மக்களின் வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மகளிர் உரிைமத்தொைக திட்டம், அரசு பள்ளிக்கூடங்களில் தொடக்க கல்வி படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 1,700 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

இதையொட்டி 70 கர்ப்பிணிகளுக்கு 5 வகை உணவுகள் வழங்கப்பட்டன. மேலும் சீர்வரிசை பொருட்களாக மஞ்சள், குங்குமம், வளையல், பேரிட்சை, பழவகைகள் ஆகியவையும் வழங்கப்பட்டன.

விழாவில் ஊராட்சி தலைவர்கள் வி.பி.இளங்கோ (குமாரவலசு), வாசுகி ஜெகநாதன் (வடமுகம் வெள்ளோடு), உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story