கடலூர்: ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் - குவிந்த இளைஞர்கள்


கடலூர்:  ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் - குவிந்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 5 Jan 2024 5:53 AM IST (Updated: 5 Jan 2024 6:28 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது. இதில் பங்கேற்க இளைஞர்கள் குவிந்து வருகின்றனர்.

கடலூர்,

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 4-ந்தேதி தொடங்கி வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) வரை 10 நாட்கள் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வில் ஏற்கனவே எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது. இதற்காக எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் குவிந்தனர்.

உடற்தகுதி தேர்வு

பின்னர் அவர்கள் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நீண்ட வரிசையில் ஹால்டிக்கெட்டில் உள்ள எண் வரிசைபடி அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. அதன்பிறகு உடற் தகுதி தேர்வுக்காக அண்ணா விளையாட்டு மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது. அப்போது நடந்த ஓட்டப்பந்தயத்தில் திருவண்ணாமலையை சேர்ந்த 2 இளைஞர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் 2 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து நேற்று காலை 6 மணி வரை இந்த தேர்வு நடந்தது. 2-வது நாள் தேர்வு இரவு 12 மணிக்கு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை நடந்தது.


Next Story