குன்னூரில், ஓட்டல்களில் இருந்த கெட்டுபோன உணவு, இறைச்சிகள் பறிமுதல்


குன்னூரில், ஓட்டல்களில் இருந்த கெட்டுபோன உணவு, இறைச்சிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில், ஓட்டல்களில் சோதனை நடத்தி கெட்டுபோன உணவு, இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

நீலகிரி

குன்னூர்: குன்னூரில், ஓட்டல்களில் சோதனை நடத்தி கெட்டுபோன உணவு, இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

ஓட்டல்களில் அதிரடி சோதனை

நாமக்கல்லில் ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென இறந்து போனார். இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் சவர்மா உணவு தயாரிக்கும் ஓட்டல்கள் உள்பட அனைத்து ஓட்டல்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து ஓட்டல்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவ்வாறு சோதனையின்போது ஓட்டல்களில் வைக்கப்பட்டிருக்கும் கெட்டுபோன உணவுகள், இறைச்சிகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேபோல் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

கெட்டுபோன உணவு, இறைச்சி பறிமுதல்

அதன்படி அவர்கள் 7-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு மற்றும் இறைச்சி உள்பட உணவுப்பொருட்களை ஆய்வு செய்தனர். அப்போது சில ஓட்டல்களில் குளிர்சாதன பெட்டிகளில்(பிரிட்ஜ்) வைத்திருந்த உணவு மற்றும் கோழி, ஆட்டு இறைச்சிகள் கெட்டுபோனது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை உடனே அதிகாரிகள் பறிமுதல் செய்து ஓரிடத்தில் கொட்டி அழித்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கெட்டுபோன உணவுகள், இறைச்சிகளை பறிமுதல் செய்த சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story