கோவையில் ஒரு கிலோ தக்காளி ரூ.12-க்கு விற்பனை
கோவையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் கிலோ ரூ.12-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை, செப்
கோவையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் கிலோ ரூ.12-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட தக்காளி
நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் தக்காளியின் விலை கிடு, கிடு வென உயர்ந்தது. கோவையிலும் தக்காளி விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்தனர். அப்போது ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஓட்டல்களில் தக்காளி சட்டினி வைப்பது, தக்காளி சாதம் ஆகியவை நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளிடம் நேரடியாக தக்காளியை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு கிலோ ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்தது. மேலும் ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் உற்பத்தி அதிகரித்ததை தொடர்ந்து விண்ணைத்தொட்ட தக்காளி விலை மண்ணைக்கவ்வும் கதையாக மாறியது. தற்போது தக்காளியின் விலை மிகவும் சரிந்து ஒரு கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து அதிகரித்தது
இதுகுறித்து கோவை தக்காளி வியாபாரி ராஜேந்திரன் கூறியதாவது:- கோவையில் தற்போது கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், நெகமம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக கோவை மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 250 டன் அளவிற்கு தக்காளி வருகிறது. இதன்காரணமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த விலைக்கு கிலோ ரூ.6 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது.
சில்லறை விற்பனையாக கடைகளில் கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில தள்ளு வண்டி கடைகளில் ரூ.100-க்கு 6 கிலோ முதல் 8 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் தக்காளி விலை மிக உச்சத்தில் இருந்தது. அப்போது கிலோ ரூ.150 வரை விலை சென்றது. ஆனால் இந்த விலையினால் கோவை விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லாமல் இருந்தது. காரணம் அப்போது தக்காளி மராட்டியம், கர்நாடகாவில் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளே அதிகமாக பயன் அடைந்தனர்.
மதிப்பு கூட்டப்பட்ட பொருள்
ஆனால் தற்போது கோவையில் தக்காளி விளைச்சல் அதிகரித்து உள்ள நிலையில் அதன் விலை மிக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் தான் ஏற்படும். இதுபோன்ற விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் தக்காளியில் இருந்து ஜாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுசார்ந்த நிறுவனங்களுக்கு மானியம் அளித்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு கொள்முதல் செய்ய வேண்டும்
இதுகுறித்து தொண்டாமுத்தூர் விவசாயி பெரியசாமி கூறியதாவது:-தக்காளியின் விலை அதிகரிக்கும் போது கர்நாடகா, மராட்டியம் விவசாயிகள் பலன் அடைகின்றனர். அதே நேரத்தில் விலை வீழ்ச்சி ஏற்படும் போது உள்ளூர் விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அரசு உரிய விலை முன்அறிவிப்பு செய்வது இல்லை. ஒவ்வொரு மாதமும் வேளாண்மை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து எத்தனை ஏக்கரில் எந்தெந்த காய்கறிகள் பயிரிடப்படுகிறது என்பதை ஆய்வு செய்கின்றனர்.
எனவே தக்காளி பயிரிடும் பரப்பளவு அதிகரிக்கும் போது அது குறித்து விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதனால் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் தக்காளி பயிரிடப்படுவது குறையும். இதனால் விலை வீழ்ச்சி ஏற்படாது. அதேநேரத்தில் விலை அதிகரிக்கும் போது அரசு கூடுதல் விலைக்கு தக்காளியை கொள்முதல் செய்து அதனை குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு வழங்குகிறது. இதே போன்று விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் விவசாயிகளிடம் இருந்து கூடுதல் விலைக்கு அரசு தக்காளியை கொள்முதல் செய்ய வேண்டும். இதன்மூலம் விவசாயிகள் பலனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.