அந்தியூர் வாரச்சந்தையில்ஒரு வெற்றிலை 2 ரூபாய் 50 காசுக்கு விற்பனை
அந்தியூர் வாரச்சந்தையில் ஒரு வெற்றிலை 2 ரூபாய் 50 காசுக்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்தியூர்
அந்தியூர் வாரச்சந்தையில் ஒரு வெற்றிலை 2 ரூபாய் 50 காசுக்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாரச்சந்தை
அந்தியூரில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் வாரம்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை வெற்றிலை விற்பனை நடைபெறும். இந்த சந்தையில் விற்பனை செய்வதற்காக அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளையம்பாளையம், காட்டுப்பாளையம், வேம்பத்தி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இதில் ராசி வெற்றிலை, பீடா வெற்றிலை என ரகம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். 100 வெற்றிலைகளை கொண்டது ஒரு கட்டு ஆகும்.
ராசி- பீடா வெற்றிலை
ராசி வெற்றிலை என்பது கரும்பச்சை நிறத்தில் மிருதுவான தன்மையுடன் இருக்கும். இந்த வெற்றிலைகள் கோவில் விழாக்கள், திருமண விழாக்கள், புதுமனை புகுவிழாக்கள் உள்பட பல்வேறு விசேஷ விழாக்களில் பயன்படுத்தப்படும்.
பீடா வெற்றிலை என்பது வெளிர் பச்சை நிறத்தில் கடினத்தன்மை கொண்டதாக இருக்கும். இந்த வெற்றிலையானது பீடா தயாரிக்க பயன்படுத்தப்படும்.
இந்த வெற்றிலைகளை ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், மேட்டூர், மேட்டுப்பாளையம், கோவை, கர்நாடக மாநிலம் மைசூரு, ராமாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து வாங்கி செல்வார்கள்.
2 ரூபாய் 50 காசு
வழக்கம்போல் அந்தியூர் வாரச்சந்தை நேற்று காலை 5 மணிக்கு கூடியது. இந்த சந்தைக்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
இதில் ராசி வெற்றிலை கட்டு ஒன்று (100 எண்ணிக்கை) குறைந்தபட்ச விலையாக ரூ.200-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.250-க்கும் விற்பனை ஆனது. அதாவது ராசி வெற்றிலை ஒன்று குறைந்தபட்ச விலையாக 2 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ரூபாய் 50 காசுக்கும் விற்கப்பட்டது.
பீடா வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.100-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெற்றிலை மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு விற்பனை ஆனது.
மகிழ்ச்சி
கடந்த வாரம் ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.200-க்கும் அதிகபட்ச விலையாக ரூ.240-க்கும், பீடா வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.90-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் வெற்றிலை விலை உயர்ந்து விற்பனை ஆனது. அதிலும் குறிப்பாக ராசி வெற்றிலை அதிகபட்சமாக 2 ரூபாய் 50 காசுக்கு விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'தற்போது திருமண விழாக்கள் அதிகம் இ்ல்ைல. ஆனால் கோவில் விழாக்கள் அதிகம் உள்ளன. மேலும் கோடைகாலம் என்பதால் வெற்றிலை உற்பத்தியும் குறைந்துவிட்டது. அதே வேளையில் வெற்றிலைக்கு தேவை அதிகமாக இருந்ததால் வெற்றிலைகள் விலை உயர்ந்து விற்பனை ஆனது,' என்றனர்.