தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தேவை- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ்  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தேவை- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x

தமிழக அரசின் கீழுள்ள அனைத்து துறைகளிலும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்களை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை


வெளிப்படைத்தன்மை

அரசு மற்றும் அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக கூடாது என்பதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.10 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. இந்த சட்டம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள், மத்திய அரசு அலுவலகங்களிலும், துணை நிறுவனங்களிலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் மாநில அளவில் மாநில தகவல் ஆணையம் செயல்படுகிறது. மத்திய அரசு அலுவலகங்களுக்கான மேல்முறையீட்டு மையமாக மத்திய தகவல் ஆணையம் செயல்படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ், நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய, வெளியுறவுக்கொள்கையை பாதிக்கும், ராணுவ ரகசியங்கள், போலீஸ் மற்றும் துணை ராணுவத்தின் ரகசிய நடவடிக்கைகள் ஆகியன குறித்து மட்டும் தகவல்கள் பெற முடியாது. இதற்கிடையே, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய அரசின் துறைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் தகவல்களை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

ஆனால் தமிழகத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இல்லை. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், 4 வருடங்களுக்கு முன்னர் தமிழக அரசின் பணியாளர் நலத்துறை தொடர்பான தகவல்களை மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அனைத்து துறைகளுக்கும் ஆன்லைனில் தகவல் கேட்டு விண்ணப்பிக்கும் வசதி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளும்

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் கூறும்போது, பதிவுத்தபால் மூலம் தகவல் பெறுவதற்கு ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.70 வரை செலவாகிறது. இதற்கு தீர்வு காண ஆன்லைன் விண்ணப்ப முறை கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி முதல் மனிதவள மேலாண்மைத்துறை சார்ந்த தகவல்களை மட்டும் ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதையடுத்து கடந்த ஆண்டு மேலும் சில துறைகளுக்கு ஆன்லைன் முறை விரிவுபடுத்தும் பணி தொடங்கியது.

ஆனால் இந்த பணிகள் முடங்கியுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் அதாவது வருவாய்த்துறையில் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த பணிகள் பிற துறைகளுக்கு விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. இதனால் 30 நாட்களுக்குள் தகவல்கள் தராமல் இழுத்தடிக்கும் பொது தகவல் அலுவலர் சார்ந்த துறை குறித்து அரசின் கவனத்துக்கு வராமல் இருக்கிறது. ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டால், எந்தெந்த அதிகாரிகளிடம் மனுக்கள் நிலுவையில் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்லைன் வசதி

தற்போது உள்ள துறைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, ரூ.22 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை மத்திய அரசு போல, ரூ.10 ஆக குறைக்க வேண்டும்.

அதேபோல, கூடுதல் தகவல் ஆவணங்களை பெறுவதற்கும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் தமிழக அரசின் அனைத்து துறைகளுக்குமான தகவல் அறியும் உரிமைச்சட்ட வசதிகளை ஆன்லைனில் பெறுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.


Next Story