லைசென்ஸ் பெறுவதற்கு போலி பள்ளி சான்றிதழ் கொடுத்தவாலிபர் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
லைசென்ஸ் பெறுவதற்கு போலி பள்ளி சான்றிதழ் கொடுத்த வாலிபர் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சேலம்
லைசென்ஸ் பெறுவதற்கு போலி பள்ளி சான்றிதழ் கொடுத்த வாலிபர் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
போலியான பள்ளி சான்றிதழ்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தும்பல் அண்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திர மணி (வயது 26). பனைமடல் பெரியசாமி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). தமையனூரை சேர்ந்தவர் மகாலிங்கம் (30). கெங்கவல்லியை சேர்ந்தவர் முத்தையன். இவர்கள்4 பேரும் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் தாங்கள் 9-ம் வகுப்பு படித்ததாக போலியான பள்ளி மாற்று சான்றிதழ் தயார் செய்து கனரக வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் பெற மனுவில் இணைத்து கொடுத்தனர். இதனை கண்டுபிடித்த ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜேந்திரன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு சேலம் 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், டிரைவர் லைசென்ஸ் பெறுவதற்கு போலியான பள்ளி மாற்று சான்றிதழ் தயாரித்து மனு அளித்த குற்றத்திற்காக மகேந்திரமணி, கார்த்திகேயன், மகாலிங்கம், முத்தையன் ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு கமலகண்ணன் தீர்ப்பு கூறினார்.