மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இந்தி திணிப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மொழித் திணிப்பு முற்றாக கைவிடப்பட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
அனைத்து நிலைகளிலும் இந்திய மொழிகளின் சமத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும். மொழித் திணிப்பு முற்றாக கைவிடப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஆர்எஸ்எஸ் கருத்தியலின் அடிப்படையில், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சிதைத்து, ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு. இதன் ஒரு பகுதியாகவே, ஒன்றிய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி மற்றும் மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மட்டுமே பயிற்று மொழி. ஆங்கில வழி கல்வி கூடாது என்ற அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (11 வது தொகுதி) சிபாரிசு அமைந்துள்ளது.
அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை அந்தக் குழுவின் தலைவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-விடம் வழங்கியுள்ளார்.
அதில், 'ஆங்கிலம் என்பது அந்நிய மொழி. எனவே, ஆங்கில வழிக்கல்வி என்ற காலனியாதிக்க நடைமுறையை கைவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளதாக அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் துணை அலுவல் மொழியாக தொடரும் என நாடாளுமன்றத்தில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அளித்த உறுதிமொழிக்கு எதிராக இந்தப் பரிந்துரை அமைந்துள்ளது.
ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி அல்லது அந்தந்த பிராந்திய மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று இந்தக் குழு கூறியிருந்த போதும், இந்த பரிந்துரையின் நோக்கம், இந்தி மொழியை திணிப்பதே ஆகும். புதிய தேசிய கல்விக் கொள்கையின் படியே இந்த மொழித் திணிப்பு அமைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஐ.நா.வின் அலுவல் மொழியாக இந்தியை சேர்க்க வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் ஐ.நா.வுடனான இந்தியாவின் தகவல் தொடர்பு இனி இந்தியில் மட்டுமே இருக்கும் என்பதே இதன் பொருளாகும். அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கிட வேண்டும்.
இந்தியா பல்வேறு மொழிகளை பேசும் மக்களைக் கொண்டுள்ள விரிந்து பரந்த நாடாகும். அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும், ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி இந்தி தெரிந்தால் மட்டுமே, ஒன்றிய அரசில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்படுவது, இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதாகும்.
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வின் போது இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் எனவும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. மொழிகளின் சமத்துவத்திற்கு எதிராகவே நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளன. ஒன்றிய அரசு இந்தக் குழுவின் பரிந்துரைகளை நிராகரித்து தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கிட முன்வர வேண்டும். ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் ஆங்கில வழிக் கல்வியும் தொடர வேண்டும்.
இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பில் மூர்க்கத்தனமாக ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அனைத்து நிலைகளிலும் இந்திய மொழிகளின் சமத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும். மொழித் திணிப்பு முற்றாக கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.