நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் -புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் அருணா பேட்டி
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
நீலகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய அம்ரித், சமீபத்தில் நில நிர்வாக இணை கமிஷனராக மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய அருணா நீலகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் நீலகிரி மாவட்டத்தின் 115-வது கலெக்டர் ஆவார்.
இந்தநிலையில் நேற்று கலெக்டர் அருணா தனது அலுவலகத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரி மற்ற மாவட்டங்களைவிட தனித்துவம் வாய்ந்தது. இதுவரை நான் சமவெளி பகுதியில் மட்டும் தான் பணியாற்றியுள்ளேன். மலை பாங்கான பகுதியில் பணியாற்றியது கிடையாது. ஆனால் சுற்றுலா பயணியாக இங்கு வந்து சென்றுள்ளேன்.
அப்போது பொதுமக்கள் தரப்பில் என்னென்ன பிரச்சினைகளை பார்த்தேனோ அதையெல்லாம் எதிர் தரப்பில் இருந்து தற்போது சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.
பழங்குடியினர் பாதுகாப்பு
மழைக்காலங்களில் நீலகிரியில் அதிகளவில் பேரிடர் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பேரிடர் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினரை சென்று அடைய முடியாத அளவிற்கு ஒரு சில பகுதிகள் உள்ளது. எனவே அரசு நலத்திட்ட உதவிகளை அந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினரை சென்றடையும் வகையில் பழங்குடியின மேம்பாடு, மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும்.
பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்திருந்தாலும் அதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரிக்கு கொண்டு வரப்படுகிறது. அதை தடுக்க சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதேபோல் மலை மற்றும் வனப்பகுதியில் கட்டிட விதிமுறை இருக்கிறதா என்பது குறித்து 100 சதவீதம் கண்காணிக்கப்படும். நீலகிரியின் தனித்துவத்தை பாதுகாக்க தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட அருணாவுக்கு அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.