சவுடு மண் குவாரியால் பாதிப்பு: லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


சவுடு மண் குவாரியால் பாதிப்பு: லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x

சவுடு மண் குவாரியால் பாதிக்கப்படுவதாக கூறி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் எறையூர் கிராமத்தில் சவுடு மண் குவாரி நடத்த தனி நபர் ஒருவருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், அந்த தனிநபர் எறையூர் கிராமத்திற்கும், மெய்யூர் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக பல அடி ஆழத்துக்கு மண் மற்றும் மணல் எடுத்து விற்பனை செய்வதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் போலீசார் சில லாரிகளையும், பொக்லைன் எந்திரங்களையும் பிடித்து வழக்குப்பதிவு செய்தனர்.

இருப்பினும், அந்த தனிநபர் கனிம வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கூறிய விதிமுறைகளை மீறி குவாரியில் சவுடு மண் எடுப்பதாகவும், இந்த குவாரி இயங்குவதால் அதிக அளவு லாரிகள் தொடர்ந்து சென்று வருவதால் எறையூர் கிராமத்தில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மாறி விட்டதாகவும் குற்றம் சாட்டி பொதுமக்கள் நேற்று குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அந்த வழியாக வந்த லாரிகளையும் சிறைபிடித்தனர். இதனால் அந்த தனிநபர் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், சுமூக தீர்வு கிடைக்கவில்லை. இதனால் நேற்று தற்காலிகமாக குவாரியை மூடி வைப்பதாக அந்த தனிநபர் கூறினார். அதன் பின்னர், சிறைப்பிடிக்கப்பட்டலாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த பிரச்சினையால் சுமார் 3 மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story