மீஞ்சூர் அருகே அனல்மின் நிலையங்களில் 1,100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
மீஞ்சூர் அருகே அனல்மின் நிலையங்களில் 1,100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் 2-வது யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் யூனிட் 3-வது அலகில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனல் மின் நிலையத்தில் முழுவதும் பராமரிப்பு பணிக்காக 45 நாட்கள் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வல்லூரில் தேசிய எரிசக்தி நிறுவனமும் தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து அனல் மின் நிலையத்தை நிறுவியது. 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 3-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பாதிப்பால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட்டும், வல்லூர் அனல்மின் நிலையத்தின் 3-வது யூனிட்டில் 500 மெகாவாட்டும் என்று 1,100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.