தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள்


தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள்
x
தினத்தந்தி 19 Nov 2022 12:30 AM IST (Updated: 19 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி பகுதியில் தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள் குறித்து பலதரப்பட்ட மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தேனி

அடிப்படை தேவைகள்

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது அரசின் கடமை. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும் சில நேரங்களில் மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை போராடி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். போராடியும், மனுக்கள் கொடுத்தும் தீர்வு காணப்படாமல் பல பிரச்சினைகள் இருக்க தான் செய்கின்றன. சின்னச் சின்ன நடவடிக்கைகளால் தீர்வு காணப்பட வேண்டிய உடனடி பிரச்சினைகள் சில நேரங்களில் தீர்க்கப்படாமல் மக்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகளை கொடுத்து விடுகின்றன.

தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தீர்வு காணப்படாத உடனடி பிரச்சினைகள் குறித்து பலதரப்பட்ட மக்களின் கருத்துகள் வருமாறு:-

திறக்கப்படாத ரேஷன் கடை

தேனி அல்லிநகரம் நகராட்சி 30-வது வார்டு பகுதியில் சுமார் 1,100 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த வார்டு பகுதியில் ரேஷன் கடை இல்லாததால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பழைய பஸ் நிலையம் பின்புறம் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. கட்டி முடித்து இதுவரை ரேஷன் கடை திறக்கப்படவில்லை. மக்கள் பல முறை மனுக்கள் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. தற்போது அந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் புதர் மண்டியும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் மாறியுள்ளது.

இதுகுறித்து 30-வது வார்டை சேர்ந்த நிவாஸ் கூறியதாவது:- எங்கள் வார்டில் ரேஷன் கடை இல்லாததால் 1 கிலோமீட்டர் தொலைவில் வாரச்சந்தை எதிரே அமைந்துள்ள ரேஷன் கடையில் சென்று பொருட்கள் வாங்கி வருகிறோம். முதியோர்கள் ஆட்டோவில் சென்று வாங்கி வருகின்றனர். இதனால் இலவச ரேஷன் அரிசியை வாங்கி வருவதற்கு கூட ஆட்டோவுக்கு ரூ.100 செலவு செய்ய வேண்டியது உள்ளது. இந்த ரேஷன் கடையை திறக்கக்கோரி பொதுமக்கள் சார்பில் 8 முறை மனு கொடுத்துள்ளோம். 2 முறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். ஆனால், எந்த மனுவுக்கும் பதில் கிடைக்கவில்லை. தீர்வும் கிடைக்கவில்லை. இந்த கடைக்கு பொருட்களை கொண்டு வர போதிய சாலை வசதி இல்லை என்றும், கடையில் பொருட்கள் வைக்க போதிய இட வசதி இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போதிய வசதி இல்லை என்றால் அந்த கட்டிடத்தை கட்டியதே அதிகாரிகள் தான். போதிய பாதை வசதி இல்லை என்றால் இந்த இடத்தை தேர்வு செய்ய வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது. தற்போது பெரிய லாரிகள் வர முடியாவிட்டாலும், மினிலாரிகள் வந்து பொருட்களை இறக்க பாதை வசதி உள்ளது. ஆனால், அதையும் செய்து கொடுப்பது இல்லை. இந்த ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அல்லது அரசு நிதி வீணடிக்கப்பட்டதாக கருதி இந்த கட்டிடத்தை, இந்த இடத்தில் கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வீணடிக்கப்பட்ட அரசு நிதியை அவர்களிடம் இருந்து பெற்று, வேறு இடத்தில் கட்டிடம் கட்டிக் கொடுக்கலாம்.

உருக்குலைந்த சாலை

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் இருந்து பூதிப்புரம் செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆதிபட்டி கொட்டக்குடி ஆற்றுப்பாலத்தில் இருந்து பூதிப்புரம்-கோடாங்கிபட்டி சாலையில் உள்ள கொட்டக்குடி ஆற்றுப்பாலம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூர சாலை உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்த சாலையில் சில ஆண்டுகள் இடைவெளியில் ஒட்டுப்போடப்படுகிறதே தவிர முழுமையாக சீரமைக்கப்படுவது இல்லை. ஆதிபட்டி, வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம், வலையபட்டி, கெப்புரெங்கன்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் பயன்பெறும் சாலையாக இது திகழ்கிறது. இப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள், முதியவர்கள் இந்த சாலையில் பயணம் செய்ய கடும் சிரமம் அடைகின்றனர்.

இதுசம்பந்தமாக வாழையாத்துப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

இது போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போது எல்லாம் பஞ்சர் பார்க்கப்படுகிறது. கடைசியாக 5 ஆண்டுக்கு முன்பு ஒட்டுப்போட்டு பஞ்சர் பார்க்கப்பட்டது. பேரூராட்சி பகுதியில் உள்ள போதிலும் இது கிராம ஒன்றிய சாலையாக உள்ளது. அதை மாநில நெடுஞ்சாலை துறைக்கு மாற்றுவதற்கு ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிந்துரையை ஏற்று மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்க வேண்டும். சுற்றுவட்டார பகுதிகளில் எல்லாம் புதிதாக சாலை அமைக்கும் போது இங்கு பல ஆண்டுகளாக ஒட்டுப்போடும் பணியை தான் பார்த்து வருகிறோம். மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் தேங்கினால் பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். 6 கிராம மக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பின் பிடியில் பஸ் நிலையம்

தேனி புறவழிச்சாலையில் கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் கடந்த 2013-ம் ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் நிலையம் முழுவதும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. பஸ் நிலைய நடைமேடையின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. மழை பெய்தால் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாத சூழல் உருவாகி உள்ளது. பயணிகள் அமருவதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் உடைந்து கிடக்கின்றன. சில இருக்கைகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகி உள்ளன. பஸ் நிலையம் கட்டப்பட்ட போது இருந்த வடிவமும், தற்போது இருக்கும் வடிவமும் மாறுபட்டுள்ளது. ஆக்கிரமிப்பு கடைகள் பெருகி உள்ளன. கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட போதிலும் பயன்படுத்தப்படாமலேயே மூடப்பட்டது.

இதுகுறித்து தேனியை சேர்ந்த பெரியசாமி கூறியதாவது:- தேனியை இயற்கை எழில் கொஞ்சும் ஊர் என்று வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுற்றுலா வருகின்றனர். ஆனால், பஸ் நிலையத்துக்கு வந்தவுடன் ஊர் மீதான நன்மதிப்பு கெட்டுப்போகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது இல்லை. எப்போதாவது ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஓரிரு கடைகள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு பெயரளவுக்கு மட்டுமே நடக்கிறது. முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் பெயரை சூட்டிவிட்டு, பஸ் நிலையம் அலங்கோலப்பட்டுக் கிடக்கிறது. மக்களுக்காக அமைக்கப்பட்டபோதிலும், தற்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கான பஸ் நிலையமாக மாறியுள்ளது. ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றிவிட்டு, பஸ் நிலையத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

தெருவில் தேங்கிய மழைநீர்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் குன்னூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. மழை பெய்தால் தெருக்களில் குளமாக தண்ணீர் தேங்கும். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் இன்னும் வடிந்து செல்லாமல் தெருக்களில் தேங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். முறையான வடிகால் வசதி இல்லாத போதிலும், தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் வைத்து அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த செல்லம் என்பவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

முறையான வடிகால் வசதி அமைத்துக் கொடுத்தால் மழைநீர் தேங்காமல் வடிந்து சென்று விடும். தற்போதைய நிலையில் தெருக்களில் பல நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளை தெருவில் விளையாட யாரும் அனுமதிப்பது இல்லை. வீட்டை விட்டு வெளியே சென்று வருவதே சிரமமாக உள்ளது. மாவட்ட கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி இப்பகுதியை சுகாதாரக்கேட்டில் இருந்தும், மழைக்கால பாதிப்புகளில் இருந்தும் மீட்டெடுக்க வேண்டும்.


Next Story