பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி தெரிவித்தார்.
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி தெரிவித்தார்.
ஆய்வுகூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த வழக்குகள், புகார் மனுக்கள் நிலுவை குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
உடனடியாக நடவடிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரதட்சணை, குடும்ப பிரச்சினை, குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள், குழந்தை திருமணம் போன்ற பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து 66 புகார் மனுக்கள் வரப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 32 புகார்கள் பதிவாகி உள்ளன. இதில் 15 புகார்கள் விசாரிக்கப்பட்டு, நீதிமன்ற வழக்குகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புகார்கள் குறைவாக வந்துள்ளது. இதனால் போதிய விழிப்புணர்வு இல்லை என தெரிகிறது.
விழிப்புணர்வை காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து வழக்குப் பதிவு செய்து உடனடியாக தவறு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள், பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் புகார் அளிக்க வரும்போது புகார் அளிக்கும் பெண்களிடம் காவலர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
மேலும் பணி புரியும் இடத்தில் பாலியல் புகார் கொடுத்து வர பெற்ற மனுக்களின் நிலுவை குறித்து மகளிர் ஆணைய தலைவர் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவுன்சிலிங்
ராணிப்பேட்டை மாவட்டம் குழந்தை திருமணத்தை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும், மேலும் 10 பெண்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து வணிக கடை வளாகங்களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோன்று எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கிட மாதத்திற்கு ஒரு முறை கவுன்சிலிங் வழங்கிட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.