சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்


சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
x

கோவில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனது நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.

இந்த விசாரணையின் போது, குறிப்பிட்ட நிலமானது நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமானது என்பதால் அதற்கு பட்டா வழங்க ஆட்சேபம் தெரிவித்ததாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கும் இந்து சமய அறநிலையத்துறை கடும் ஆட்சேபம் தெரிவித்தது. கோவில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இதுபோன்று வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரியாமல் கோவில் நிலங்கள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தபட்ட நிலங்களை தானம் அளித்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் அறநிலையத்துறை இது குறித்து உரிய விசாரணை நடத்தி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் இந்த நடவடிக்கையால் நிலங்களை வாங்கிய நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும் கூட, அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட முடியாது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.



Next Story