ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை விவகாரம் - ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைப்பு
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களின் தொடர் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 31-ந்தேதி மெக்கானிக்கல் பிரிவில் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வந்த சச்சின் ஜெயின் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஐ.ஐ.டி. நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவரின் தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தது.
அதன்படி தற்போது ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை அமைத்து ஐ.ஐ.டி. நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த குழுவினர் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர். இந்த குழு முன்பாக மாணவர்கள் ஆஜராகி சச்சின் ஜெயின் தற்கொலை தொடர்பாக தங்களுடைய விளக்கத்தை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.