குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர்-அரசு அலுவலர்கள் புறக்கணிப்பு
குறை தீர்க்கும் கூட்டத்தை கலெக்டர்-அரசு அலுவலர்கள் புறக்கணித்தனர்.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை சரியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
நெல் கொள்முதல் நிலையம்
தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனவரி மாத முதல் வாரத்திலேயே நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்யும்போது, எடை மோசடியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், நபர்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.
தோட்டக்கலை துறையில் களை எடுக்கும் எந்திரம் (பவர் வீடர்) சந்தை மதிப்பை விட கூடுதலாக உள்ளது. மானியமும் குறைவாக கிடைக்கிறது. மற்ற மாவட்டங்களில் இந்த களை எடுக்கும் எந்திரத்துக்கு மானியம் வழங்குவது போல், பெரம்பலூரிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
நஷ்ட ஈடு
மகசூல் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருடன் வந்த விவசாயி ராஜூ பேசுகையில், மாவட்டத்தில் மானாவாரி நிலத்தில் மக்காச்சோளத்தை ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். காலம் கடந்து பருவமழை பெய்த காரணத்தால் மக்காச்சோளம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மகசூல் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
மின் இணைப்புடன் ஆதார் எண்...
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லதுரை பேசுகையில், மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் அரசே நடமாடும் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை கொடுத்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தமிழ்நாடு பாமாயில் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் பேசுகையில், வேப்பூரில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். திருவள்ளுவர் உழவர் மன்ற தலைவர் பூலாம்பாடி வரதராசன் பேசுகையில், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் கால அவகாசம் அளிக்க தமிழக அரசை கலெக்டர் வலியுறுத்த வேண்டும், என்றார்.
மனுவாக கொடுங்கள்
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், உரங்கள் சட்ட விதிகளுக்கு புறம்பாக தனியார் நிறுவனங்களில் சிலர் உர சாக்குகளை மாற்றி கலப்படம் செய்து உரங்களை விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் நில பதிவுகளை, நில ஆவணங்களை கணினிமயமாக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டபடி கிராமங்களில் சரியாக செயல்படுத்தவில்லை, என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, விவசாயிகள் மனு அளிக்கலாம் என்று அறிவித்ததையடுத்து, விவசாயிகள் பலர் முண்டியடித்து கொண்டு மேடையில் அமர்ந்திருந்த கலெக்டர் உள்ளிட்டோரிடம் மனு அளித்து, விவரித்து கொண்டிருந்தனர். இதனால் ராஜா சிதம்பரம் பேசியதை அதிகாரிகள் கேட்கவில்லை. இதற்கிடையே, ராஜா சிதம்பரத்திடம் பேசியது போதும், பேசும் விஷயம் குறித்து மனுவாக கொடுங்கள் என்று கலெக்டர் கூறினார்.
கூட்டம் புறக்கணிப்பு
இதனால் ஆத்திரமடைந்த ராஜா சிதம்பரம் உள்ளிட்ட விவசாயிகள் சிலர், நேரம் குறித்து பேசி முடிக்க சொல்வதற்கு இங்கே பேச்சுப்போட்டி நடைபெற வில்லை. விவசாயிகளின் பிரச்சினையை கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் கையாளும் விதம் சரியில்லை. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை மாதந்தோறும் கலெக்டர் முறையாக நடத்துவதில்லை. வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் கூட்டத்துக்கு வருவதில்லை.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எழுத்து பூர்வமாக பதில் அளிப்பதில்லை. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டமாக நடைபெறுகிறது என்று ஆவேசமாக பேசினர். மேலும் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அனைவரும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து இடையிலேயே முடித்துக்கொண்டு கிளம்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.