ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்த வேண்டும்-பாதிக்கப்பட்டவர் தரப்பில் வலியுறுத்தல்


ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்த வேண்டும்-பாதிக்கப்பட்டவர் தரப்பில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 May 2023 12:45 AM IST (Updated: 6 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

திருநெல்வேலி

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

பற்களை பிடுங்கியதாக புகார்

நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி அம்பை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை நடத்தினார். இதையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் சிலர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

8 பிரிவுகளில் வழக்கு

இதற்கிடையே, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் 17 வயது சிறுவனுக்கு பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அருண்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில், சி.பி.சி.ஐ.டி. ஆர்கனைஸ்டு கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் விசாரணை நடத்தினார்.

இதுதொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், விக்கிரமசிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு போலீஸ்காரர் போகன்குமார் ஆகியோர் மீது சிறார்களை துன்புறுத்துதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அருண்குமார் உள்ளிட்ட 7 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

26 பக்க மனு

இந்த நிலையில் அருண்குமாரின் தந்தை கண்ணன், தாய் ராஜேஸ்வரி, பாதிக்கப்பட்ட சிறுவன் ஆகியோர் தங்களது வக்கீல்களுடன் நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. ஆர்கனைஸ்டு கிரைம் பிரிவு அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்கள்.

அப்போது ராஜேஸ்வரி, தங்களது கோரிக்கைகளை 26 பக்கங்கள் அடங்கிய மனுவாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரிடம் வழங்கினார். பின்னர் அவர்கள், வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்காமல் வெளியே வந்தனர்.

அப்போது அவர்களின் வக்கீல் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி

பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவங்கள் நடந்து சுமார் 50 நாட்களுக்கு பின்னர் போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அருண்குமார் 5-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று 3-ந்தேதிதான் சம்மன் வழங்கப்பட்டு உள்ளது. அதுவும் அவருடைய தாயாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் அருண்குமார் பெங்களூருவில் இருந்து வரமுடியவில்லை. நாங்கள் தற்போது இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்கள் எதுவும் கொடுக்கவில்லை. எங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பந்தப்பட்டு இருப்பதால், ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரியை வழக்கின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்க வேண்டும். அப்போது இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடக்கும். நாங்கள் பயமின்றி சாட்சிகள் சொல்ல வரமுடியும். அதேபோல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போதுதான் போலீஸ் நிலையங்களில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தைரியமாக வந்து சாட்சி செல்ல உதவியாக இருக்கும். அதன்பின்னரே நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக சாட்சி கூறுவோம் என்று எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் நிலையத்தில் ஆய்வு

இதற்கிடையே, விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. ஆர்கனைஸ்டு கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அவர்களுடன் தடயவியல் நிபுணர் ஆனந்தி தலைமையிலான குழுவினரும் சென்று, போலீஸ் நிலையத்தில் உள்ள தடயங்களை பதிவு செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலைய வரைபடத்தை வைத்து, அங்குள்ள அனைத்து அறைகளிலும், சுற்றுப்புற பகுதிகளிலும் ஆய்வு செய்து தடயங்களை பதிவு செய்தனர். இந்த ஆய்வு சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.


Next Story