மனம் திறந்து பேசினாலே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடலாம் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
அன்புக்குரியவர்களிடம் மனம் திறந்து பேசினாலே தற்கொலை எண்ணத்தில் இருந்து எளிதில் விடுபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் அறிவுரை வழங்கி பேசினார்.
தடுப்புத்தினம்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்கொலை தடுப்புக்காக தொடங்கப்பட்ட 'சிநேகா' என்ற தன்னார்வ நிறுவனம் சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் சிநேகா அமைப்பின் தலைவர் நல்லி குப்புசாமி வரவேற்று பேசினார். இயக்குனர் ஆனந்த் நன்றி தெரிவித்து பேசினர்.
நம்பிக்கையான நட்பு
இந்த நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசியதாவது:-
சிநேகா தன்னார்வ அமைப்புக்காக குறும்படம் தயாரிக்கும் ஜெயேந்திர பஞ்சாபகேசனும், நானும், கல்லூரி நண்பர்கள். அந்த சிநேகம்தான் இந்த சிநேகா நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து வந்துள்ளது. ஆனால், தற்போதுள்ள இளைய தலைமுறைக்கு இதுபோல நம்பிக்கையான நட்பு வட்டாரம் இல்லை. ஒருவர் தற்கொலை சிந்தனையில் இருந்து வெளியேற நண்பர்களிடம் ஒரு நிமிடம் மனம் விட்டு பேசினாலே போதுமானது. ஆனால், அதுபோன்ற நண்பர்கள் தற்போது இல்லாததால், இளைய தலைமுறையினர் தற்கொலை முடிவை எளிதாக நிறைவேற்றி விடுகின்றனர்.
தண்டனை இல்லை
ராமாயணத்தில் கூட சீதை தற்கொலை எண்ணத்தில் இருந்தார். அனுமன் அங்கு சென்று நம்பிக்கையூட்டும் விதமாக பேசிய பின்னர், தன் தோளில் தூக்கிச் செல்கிறேன் தாயே என்று கூறியபோது அதை சீதை ஏற்கவில்லை. ராவணனை அழித்து தன்னை ராமன் அழைத்து செல்ல வேண்டும் என்று நம்பிக்கையுடன் பதில் அளித்தாள். எனவே, அனுமனை போல தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கினாலே போதுமானது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 309, தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு தண்டனை வழங்கும் பிரிவாகும். அதாவது தற்கொலைக்கு முயன்ற தோல்வி அடைந்தவர்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு, தற்கொலையில் வெற்றி பெற்று இறந்தவர்களுக்கு தண்டனை வழங்க முடியவில்லையே என்று கிண்டலாக சட்டக்கல்லூரியில் படித்தபோது நாங்கள் பேசிக்கொள்வோம்.
விடுபடலாம்
ஆனால், கென்யா உள்ளிட்ட சில நாடுகளில் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, தற்கொலை செய்துக்கொண்டவர்கள் எழுதி வைக்கும் உயிலை நிறைவேற்றமாட்டார்கள். எனவே, அன்புக்குரியவர்களிடம் மனம் திறந்து பேசினாலே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கொரோனா காலம்
இந்த நிகழ்ச்சியில் சிநேகா அமைப்பின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் பேசியதாவது:-
1986-ம் ஆண்டு தற்கொலையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. நேரடியாகவும், தொலைபேசி, இ-மெயில் மூலமாகவும் தற்கொலை எண்ணத்தில் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிறோம். இதனால் ஏராளமானோர் பயன் அடைந்துள்ளனர். இந்த வெற்றிக்கு எங்கள் அமைப்பில் செயல்படும் தன்னார்வலர்கள்தான் காரணம்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் தற்கொலைகள் நடந்துள்ளன. 2019-ம் ஆண்டு இந்தியாவில் 1.35 லட்சம் இருந்த தற்கொலை எண்ணிக்கை, 2022-ம் ஆண்டு 1.65 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது சுயதொழில் செய்து ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம் பேர் தற்கொலை செய்துள்ளனர்.
விழிப்புணர்வு
அதுவும் சென்னையில் தற்கொலை எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது. 2019-ம் ஆண்டு 1,300 பேர் சென்னையில் தற்கொலை செய்துள்ளனர். 2022-ம் ஆண்டு 2,600 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தென்மாநிலங்களில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகம் பேர் தற்கொலை செய்கின்றனர். இதனால், தற்கொலை தடுப்பு பற்றி 3 குறும்படங்களை தயாரித்து திரையரங்கு உள்ளிட்ட பொது வெளியில் திரையிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.