"வீட்டுக்கு சென்றால் மனைவி அடிப்பார்"
மதுபோதையில் கார் ஓட்டி வந்தவருக்கு போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால் அந்த போதை ஆசாமி, "வீட்டுக்கு சென்றால் மனைவி அடிப்பார்" என்று போலீஸ்நிலையத்தில் அடம்பிடித்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுபோதை
மதுபோதையில் வாகனம் ஓட்டுவது குற்றம் என்று தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் தேனி நகரில் மதுபோதையில் கார் ஓட்டிய டிரைவருக்கு போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அபராதம் விதித்ததை தொடர்ந்து அவர் ஓட்டி வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அபராதம் விதித்தது தொடர்பான ரசீதை அவரிடம் கொடுத்தனர். வீட்டுக்கு சென்று விட்டு காலையில் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அவரை அனுப்பினர்.
தூங்குவதற்கு இடம்
ஆனால், அந்த மதுப்பிரியர் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்து போலீஸ் நிலைய வளாகத்திலேயே நின்று கொண்டிருந்தார். நள்ளிரவு வரை அவர் வெளியே செல்வதும், மீண்டும் போலீஸ் நிலையத்துக்குள் வருவதுமாக இருந்தார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம், 'இரவில் இங்கேயே தூங்கிக் கொள்கிறேன். இப்படியே வீட்டுக்கு சென்றால் என் மனைவி அடிப்பார். நான் ஒரு ஓரமாக படுத்துக் கொள்கிறேன்' என்று கெஞ்சினார்.
'அபராதம் ஏன் விதித்தோம்' என்று போலீசாரே நொந்துபோகும் அளவுக்கு நடந்து மதுப்பிரியர் நடந்து கொண்டார். நீண்டநேர அறிவுரைக்கு பின்னர் அவர் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு இதேபோல் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபருக்கு அபராதம் விதித்து அவரை தேனி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது போதையில் வீர வசனங்கள் பேசிய அந்த வாலிபர் திடீரென ஆத்திரத்தில் போலீஸ் நிலையத்தில் ஒரு மேஜை மீது இருந்த கண்ணாடியை கையால் உடைத்து சேதப்படுத்திய சம்பவம் நடந்தது. இதுபோன்ற சம்பவங்களால், மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை பிடிக்கவும், அவ்வாறு பிடித்தாலும் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கும் போலீசார் தயங்குவதாக கூறப்படுகிறது.