லியோ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
சினிமா தியேட்டர்களில் லியோ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போக்குவரத்து
தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் லியோ திரைப்படத்துக்கு கூடுதலாக ஒரு சிறப்புக்காட்சி இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை ஒரு நாளைக்கு அதிக பட்சம் 5 காட்சிகள் திரையிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் லியோ திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சியின் போது முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்
தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது. இது தொடர்பான புகார்களை கோட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு குழுவினரிடம் தெரிவிக்கலாம். அதன்படி கள்ளக்குறிச்சி கோட்டத்தில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, கள்ளக்குறிச்சி வணிகவரி அலுவலர்(மாநில வரி)- 94450 00421 என்ற எண்ணிலும், திருக்கோவிலூர் கோட்டத்தில் திருக்கோவிலூர் கோட்டாட்சியர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் திருக்கோவிலூர் வணிகவரி அலுவலர்(மாநில வரி)-94450 00422 என்ற எண்ணில் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
கூட்ட நெரிசல் ஏற்படாமல்
மேலும் கூடுதல் காட்சி நடைபெறும் நேரங்களில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். திரைப்படம் காண்போர் வாகனங்களில் உள்ளேவருவது, வெளியே செல்வது, வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையில் இருக்க போலீசாரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சிகள் நடைபெற வேண்டும்.
கடும் நடவடிக்கை
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் சினிமா தியேட்டர்களின் உரிமையாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். விதிமீறல்கள் ஏதும் இருந்தால் தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.