உ.பி.யில் நியாயமான அரசு இருந்திருந்தால் கொலை மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்திருப்பார்கள் - கார்த்தி சிதம்பரம் எம்.பி.
உத்தர பிரதேச அரசிடம் இருந்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
சிவகங்கை,
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, அது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர், சனாதன கொள்கைக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதை எரிப்பது போன்ற வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இதே நபர் தான் சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிட்டால் ஜல சமாதி அடைய போவதாக விளம்பரம் செய்து பின்னர் பின்வாங்கியவர் ஆவார்.
இவரது மிரட்டலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"உத்தர பிரதேசத்தில் நியாயமான அரசு ஆட்சி செய்திருக்குமானால், தன்னையே சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் அந்த நபரை உடனடியாக கைது செய்திருப்பார்கள். ஆனால் அங்கு நடப்பதோ புல்டோசர் ஆட்சி. அவர்களிடம் இருந்து இத்தகைய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன். அவர் கூறிய கருத்தை திரித்து திசைதிருப்பும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன்."
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.