வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஆளும் கட்சியினரின் அத்துமீறல் இருந்தால் புகார் கொடுக்க வேண்டும்; அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் இருந்தால் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுக்க வேண்டும் என அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
இறுதி வாக்காளர் பட்டியல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 1.1.2024-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கான பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி வருகிற 27-ந் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 27-ந் தேதி முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை திருத்தங்கள் மற்றும் ஆட்சேபனைகள் செய்வதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது. நவம்பர் 4, 5, 18, 19-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படுகிறது.
புதிய வாக்காளர்களின் பெயர்களை...
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் அனைத்து நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கட்சி தொண்டர்களும், அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களும் தனிக்கவனம் செலுத்தி, 18 வயது பூர்த்தியான இளைஞர்களையும், இளம் பெண்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிவந்துள்ளவர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒரு நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்யப்பட்டுள்ளதை அடையாளம் கண்டு நீக்கம் செய்வதற்கும், வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கும், தேவையான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில் வழங்கி இப்பணியை முழுமையாக செய்து முடித்திட வேண்டும்.
ஆளுங்கட்சியினர் அத்துமீறல்
அதே போல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்கள் இருப்பதாக தெரியவந்தால், உடனுக்குடன் அது தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும். அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடி நிலை முகவர்களை உடனடியாக நியமித்து, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியலை சமர்ப்பித்திட வேண்டும்.
கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிப்பதற்கும், சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் கட்சி சார்பில் ஆங்காங்கே வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்போடு மேற்கொள்வதற்குமான ஏற்பாடுகளைச் செய்து இப்பணியை முடித்து, இதுசம்பந்தமாக தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களை கட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.