கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்


கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்
x
தினத்தந்தி 21 Oct 2023 3:30 AM IST (Updated: 21 Oct 2023 3:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லியாளம் டேன்டீ தோட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று தொழிலாளர்கள் பதாகைகளை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

பந்தலூர் அருகே நெல்லியாளம் டேன்டீ ரேஞ்ச் எண்.1,2,3,4 ஆகிய பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் அரசால் கட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பத்தினருடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் தேயிலை தோட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடி கட்டப்பட்டு உள்ளதுடன், பதாகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. அதில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் கருத்து கேட்காமல் உருவாக்கப்பட்ட அரசாணை எண்.173-ஐ ரத்து செய்ய வேண்டும். வனவிலங்குகளிடம் இருந்து தொழிலாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகளை நிரந்தரமாக வழங்க வேண்டும். தற்காலிக தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கி, அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தபடி இலங்கையில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு தாயகம் திரும்பி தோட்டங்களில் குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும். இல்லையென்றால் தேயிலை தோட்டத்தில் 3 ஏக்கர் வரை பிரித்து கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என தீர்மானித்து உள்ளோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story