மீண்டும் சேதமடைந்த கடக்கால்... ஏரிக்கரை உடையும் அபாயம்


மீண்டும் சேதமடைந்த கடக்கால்... ஏரிக்கரை உடையும் அபாயம்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:54 AM IST (Updated: 30 Nov 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

மீண்டும் சேதமடைந்த கடக்காலால் ஏரிக்கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்

சேதமடைந்த கடக்கால்

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே ஏரி ஒன்று உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த ஏரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும், கிணறுகளுக்கும் இந்த ஏரி நீர் ஆதாரமாக உள்ளது.

இதற்கிடையே இந்த ஏரியின் உபரிநீர் வெளியேற்றப்படும் கடக்கால் பகுதி பலவீனமாக இருந்தது. இதனை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்-அமைச்சருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

கரை உடையும் அபாயம்

இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசுவகுடி ஏரியின் கடக்கால் புனரமைப்பு பணி ரூ.5 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்றது. இந்த பணி முடிந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், பின்னர் பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியுள்ளது.

இந்த நிலையில் தற்போது கடக்கால் பகுதியில் கட்டப்பட்ட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, சேதம் அடைந்துள்ளது. மேலும் கடக்கால் பகுதியின் அடிப்பகுதியில் இருந்து தண்ணீர் கசிந்து வெளியேறுகிறது. இதனால் ஏரிக்கரை உடையும் அபாயம் உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே உடனடியாக கடக்கால் பகுதியை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்க்கசிவு

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் அப்பகுதியை சேர்ந்த பெண் விவசாயி சுதா:- பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து விசுவகுடி ஏரி கடக்கால் சீரமைப்பு பணி நடைபெற்றது. ஆனால் கடக்கால் முறையாக சீரமைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கடக்கால் பகுதியில் மறுசீரமைப்பு பணி செய்ய வேண்டும்.

முறையாக சீரமைக்க வேண்டும்

சமூக ஆர்வலர் முகமது ஜக்கரியா:- அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசலூர் ஏரியில் கடந்த ஆண்டு கடக்கால் அருகே உடைப்பு ஏற்பட்டு ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியது. இதனால் அந்த கிராமத்தில் நீராதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. இதேபோல் ஒரு சம்பவம் விசுவகுடியில் நடந்து விடுமோ? என்ற அச்சம் இந்த பகுதி விவசாயிகளிடம் நிலவி வருகிறது. குறிப்பாக விசுவகுடி ஏரி கடக்கால் சீரமைப்பு பணி முடிந்து சில மாதங்களை ஆன நிலையில், தற்போது நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. பழைய கட்டுமானத்தை முற்றிலுமாக அகற்றிவிட்டு, புதிதாகவே கட்டியிருக்கலாம். அவ்வாறு செய்யாத நிலையில், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டும் பயனில்லாத நிலை உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர், இந்த கடக்கால் பகுதியை நேரில் ஆய்வு செய்து தண்ணீர் வீணாக வெளியேறாத வகையில் முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இந்த பகுதியில் நீராதாரம் நிலையாக இருக்கும்.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

விசுவகுடியை சேர்ந்த முஸ்தபா:- ஏரியின் அருகில் சிறுவர், சிறுமிகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க, முன்கூட்டியே திட்டமிட்டு மக்களையும், விளை நிலங்களையும் பாதுகாக்க வேண்டும். ஏரியில் தண்ணீர் தேங்கியிருந்தால்தான் விசுவகுடி கிராமத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு வராது. இல்லையென்றால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் நீர்நிலைகளில் உள்ள கட்டுமானங்களை தரமாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story