விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க சாலை விதிகள் முழுமையாக தெரிந்தால் மட்டுமே 'லைசென்ஸ்'- அமைச்சர் எ.வ.வேலு
‘‘விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க சாலை விதிகளை முழுமையாக தெரிந்தவர்களுக்கு மட்டுமே போக்குவரத்துத்துறை இனி ‘லைசென்ஸ்’ வழங்கவேண்டும்’’, என அமைச்சர் எ.வ.வேலு பரிந்துரைத்துள்ளார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தமிழக அரசின் நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சியின் தொடக்க விழா, செங்கல்பட்டில் உள்ள நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
வீட்டுக்கு ஒரு கார்
ஒரு காலத்தில் ஒரு ஊருக்கு ஒரு கார் மட்டுமே இருந்த நிலை காணப்பட்டது. பின்னர் ஒரு தெருவுக்கு ஒரு கார் என்ற நிலையை கடந்து, தற்போது ஒரு வீட்டுக்கு ஒரு கார் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பல வீடுகளில் கூடுதலாக கார்களும் இருக்கின்றன. மக்களின் தேவைக்கேற்ப கார்களின் உற்பத்தியும் அதிகரித்து விட்டது.
இதனால் சாலை விரிவாக்கம் என்பது மிகவும் அவசியமாகி விட்டது. ஆனால் நிலம் இல்லாதவர்கள் கூட பச்சை துண்டு போட்டுக்கொண்டு எங்கள் நிலத்தை எடுக்காதீர்கள் என்று இப்போது பிரச்சினை செய்கிறார்கள். தற்போது உள்ள சூழலுக்கு சாலை விரிவாக்கம் செய்தாக வேண்டும். அதாவது 2 வழிச்சாலை என்பதை 4 வழிச்சாலையாக மாற்றிட வேண்டும். இது காலத்தின் கட்டாயமும்கூட. விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க சாலை விதிகள் முழுமையாக தெரிந்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்) தரவேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் போக்குவரத்து துறை முழுமூச்சில் ஈடுபடவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால்...
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-
சாலையில் நாம் ஒழுங்காக சென்றால் கூட, பிற வாகனங்கள் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டாலும் விபத்துகள் நடந்துவிடும். மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் பயணிக்க கூடாது. லைசென்ஸ் பெற்ற பிறகுதான் மாணவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டவேண்டும். முன்பு விபத்து ஏற்பட்டால் அதில் சிக்கியவர்களை காப்பாற்ற பொதுமக்களுக்கு ஒரு தயக்கம் ஏற்படும். ஆனால் தற்போது 'நம்மை காக்கும் 48' திட்டத்தின்கீழ் விபத்தில் சிக்கியோரை மீட்பவரின் மனிதாபிமானத்தை அங்கீகரித்து சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதால், பல உயிர்கள் இன்றைக்கு காப்பாற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
கையேடு வெளியீடு
அதனைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் பரிசும், சான்றிதழும் வழங்கினர். அதனைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடும் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைகள் - சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், க.செல்வம் எம்.பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தொழில் தட திட்ட இயக்குனர் எஸ்.ஸ்ரீதர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் ப.கணேசன் வரவேற்றார். தலைமை என்ஜினீயர் என்.சாந்தி நன்றி கூறினார்.