இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை.. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி


இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை.. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2024 8:20 PM IST (Updated: 25 Feb 2024 1:23 PM IST)
t-max-icont-min-icon

திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என மதுரை பாத யாத்திரை நிகழ்ச்சியில் அண்ணாமலை கூறினார்.

மதுரை,

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையம் முன்பு பாதயாத்திரையை தொடங்கினார். தனது யாத்திரையின் போது அண்ணாமலை பேசியதாவது:-

அரசியல் மாற்றத்திற்கான மண்ணாக மதுரை உள்ளது. கட்சியை தொடங்க வேண்டும் என்றாலும், மதுரைதான். முடிக்க வேண்டும் என்றாலும் மதுரைதான். தமிழக அரசியலில் எல்லாவற்றிலும் தவறு உள்ளது. அதனை சரி செய்யும் வாய்ப்பாக வருகிற தேர்தல் உள்ளது.

தமிழகத்தில் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சியை அகற்றுவதற்கு இதுவே சரியான தருணம். 2024-ல் திராவிட அரசியலை வேரோடும், மண்ணோடும் சாய்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பாத யாத்திரை. மக்கள் நீங்கள் நம்புவது போல், இந்த முறை இல்லை என்றால் எப்போதும் இல்லை. திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இதுவே கடைசி வாய்ப்பு. தி.மு.க. தமிழகத்தில் கால் ஊன்ற தொடங்கிய பின்பு எல்லாவற்றிலும் ஊழல், லஞ்சம் நிறைந்து விட்டது. காமராஜர் ஆட்சி காலத்தில் இதுபோன்ற வார்த்தைகளை மக்கள் கேட்டதில்லை. மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும். அதற்காக பா.ஜனதா பாடுபடுகிறது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதையும் நிறைவேற்றாமல் கனவு உலகத்தில் இருக்கிறார்.தி.மு.க. தொண்டர்களும் தெளிவாகி விட்டார்கள். அவர்களும் மோடிக்குத்தான் வாக்களிப்பார்கள். தி.மு.க.வை தேற்கடிக்க பா.ஜனதா தேவையில்லை. தி.மு.க.வின் தொண்டர்களே போதும்.ஏணி வைத்தால் கூட தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் எட்டாது. பொய்யை மூலதனமாக வைத்து அரசியல் செய்கிறார்கள். இதற்கு முடிவு கட்ட பா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.


Next Story