வடலூர் வள்ளலார் பெருவெளியை தி.மு.க அரசு கையகப்படுத்தினால் மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் - சீமான்


வடலூர் வள்ளலார் பெருவெளியை தி.மு.க அரசு கையகப்படுத்தினால் மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் - சீமான்
x

பன்னாட்டு ஆய்வு மையத்தை வடலூரில் வேறு பகுதியில் அமைத்திட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த தி.மு.க. அரசு இன்று அடிக்கல் நாட்ட முனைவது வன்மையான கண்டனத்துக்குரியது.

வள்ளல் பெருமானாரை வணங்கிப் போற்றுவதற்காக லட்சக்கணக்கான அடியவர்கள் கூடும் வடலூர் பெருவெளியை மக்களின் விருப்பத்திற்கு மாறாக கைப்பற்ற முனைவது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

வள்ளலார் ஆய்வு மையத்தை வடலூருக்கு அருகிலேயே யாருக்கும் பாதிப்பில்லாத வேறு பகுதியில் அமைத்திட வேண்டுமென நான் கடந்த 17-12-2023 அன்று அறிக்கை வாயிலாக வலியுறுத்தியிருந்தேன். அதுமட்டுமின்றி, வடலூர் உத்திர ஞான சிதம்பர சேவை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கடந்த 10-01-2024 அன்று மஞ்சக்குப்பத்தில் நடைபெற்ற உண்ணாநிலை அறவழிப் போராட்டத்திற்கும் ஆதரவளித்து, நாம் தமிழர் கட்சி பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மண்ணை கடந்த அரை நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்துவரும் இரு திராவிடக் கட்சிகளும் இத்தனை ஆண்டுகளாக பேரருளாளர் வள்ளலாரின் புகழைப் போற்றுவதற்கோ, அவர் காட்டிய சமத்துவ வழியைப் பரப்புவதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, தற்போது அடியவர்கள் கூடும் வடலூர் பெருவெளியை, வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையம் என்ற பெயரில் கையகப்படுத்த நினைப்பது எவ்வகையிலும் ஏற்புடையதன்று.

ஏறத்தாழ 70 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஆய்வு மையத்தால் அங்கு கூடும் அடியவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாக நேரிடும் என்பதோடு, கூட்ட நெரிசல் ஏற்பட்டு எதிர்காலத்தில் விபத்துகள் நிகழவும் வாய்ப்பேற்படும். எனவே, வள்ளலார் பன்னாட்டு ஆய்வு மையத்தை, வடலூரில் வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என்ற வடலூர் மக்கள் மற்றும் வள்ளல் பெருமானாரின் அடியவர்களின் கோரிக்கையை தி.மு.க. அரசு ஏற்பதே நியாயமானதாக இருக்கும்.

மாறாக உண்மை ஒளியை காண்பதற்காக அருட்செல்வர் வள்ளலாரால் அமைக்கப்பட்ட வடலூர் பெருவெளியை ஆக்கிரமித்து, அடியவர்களின் மனதை புண்படுத்தி ஆய்வு மையம் அமைப்பதென்பது வள்ளலாரின் மெய்யியல் நோக்கத்தையே சிதைப்பதாகிவிடும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய உயர்மநேயர், தமிழர் மெய்யியல் மீட்பர், வள்ளல் பெருமானார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியைக் கையகப்படுத்துவதை விடுத்து, புதிதான அமைக்கப்படவிருக்கும் பன்னாட்டு ஆய்வு மையத்தை வடலூரில் வேறு பகுதியில் அமைத்திட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக, வடலூர் வள்ளலார் பெருவெளியை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தினால் மாபெரும் மக்கள் போராட்டத்தை தி.மு.க. அரசு எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story