சீமை கருவேலம் மரங்களை அப்புறப்படுத்த குழுக்கள் அமைக்கவில்லை என்றால் நடவடிக்கை - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை


சீமை கருவேலம் மரங்களை அப்புறப்படுத்த குழுக்கள் அமைக்கவில்லை என்றால் நடவடிக்கை - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
x

சீமை கருவேலம் மரங்களை அப்புறப்படுத்த குழுக்களை அமைக்கவில்லை என்றால், தமிழ்நாடு அரசு மீது நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை.

சென்னை,

சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் சீமைக்கருவேலம் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தென்காசி மாவட்டத்தில் சுமார் 1000 ஹெக்டேர் பரப்புக்கும், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 500 ஹெக்டேர் பரப்புக்கும் மேலும் இருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டு இருந்தது.

இதை படித்து பார்த்த நீதிபதிகள், இதுபோல சீமை கருவேல மரங்கள் அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால் தான் அவை மீண்டும் வளர விடாமல் தடுக்க முடியும். சீமை கருவேல மரங்களை அகற்ற குழுக்கள் அமைக்க வேண்டும் என்ற பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை. எனவே, உண்மையில் இந்த மரங்களை அப்புறப்படுத்த அரசுக்கு ஆர்வம் உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், ஐகோர்ட்டு உத்தரவின்படி குழுக்கள் விரைவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று எச்சரிக்கை செய்தனர். விசாரணையை வருகிற ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story