இலங்கையில் இருந்து தப்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் தமிழகத்துக்குள் வந்தால் கடும் நடவடிக்கை


இலங்கையில் இருந்து தப்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் தமிழகத்துக்குள் வந்தால் கடும் நடவடிக்கை
x

இலங்கையில் இருந்து தப்பிய போதைப்பொருள் கடத்தல்காரர் தமிழகத்துக்குள் வந்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

சென்னை

சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் போலீசார் பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது. இங்கு போலீசார் மற்றும் குடும்பத்தினர் பயன்பாட்டுக்காக புதிதாக மின்தூக்கி (லிப்ட்) அமைக்கப்பட்டது. இதன் இயக்கத்தை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று தொடங்கி வைத்தார்.

மேலும் அவர், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் போலீசார் பல்பொருள் அங்காடிகளில் உள்ள பொருட்கள் மற்றும் இதர வீட்டு உபயோக பொருட்களின் இருப்பு மற்றும் விலை விபரங்களை எளிதாக முன்கூட்டியே அறிந்து கொண்டு வாங்கும் வகையில் தொடு திரை வசதியையும், செல்போன் செயலிகள் மூலம் அனைத்து காவலர் அங்காடியிலும், 'ஆன்லைன்' பணபரிவர்த்தனை செய்யும் புதிய வசதியையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், நலப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ், சென்னை தலைமையக கூடுதல் கமிஷனர் லோகநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான போலீசாரும், அவரது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். அவர்களிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டம்-ஒழுங்கு மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டது. கடந்தாண்டில் மட்டும் பணியின்போது 250 போலீசார் உயிர் நீத்துள்ளனர். அவர்களின் வாரிசுகள் 1,600 பேருக்கு போலீஸ் துறையில் வேலை கொடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி முதல்கட்டமாக 1,132 போலீசாரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் மற்றும் போலீஸ் நிலைய வரவேற்பாளர் பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் அனைத்து போலீசாருக்கும் இரவு நேரப்படி வழங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது இதுவே முதல்முறை ஆகும். இதேபோல் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு மட்டும் அல்லாமல் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக போலீஸ்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கஞ்சா வேட்டை 3 பகுதிகளாக இதுவரை நடத்தப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் ஊடுருவி வந்துள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிறப்பு முகாமிலும், மேலும் சிலர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபாணி இம்ரான் ஜாமீனில் வெளியே வந்து, அங்கிருந்து தப்பி விட்டதாக கூறப்படுகிறது. அவர் தமிழகத்துக்குள் ஊடுருவி வரலாம் என்ற சந்தேக தகவல் பரவி உள்ளது. அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர் தமிழகத்தில் ஊடுருவினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உடனே கைது செய்யப்படுவார்.

பயங்கரவாதிகளை கண்காணிக்கும் சிறப்பு பிரிவு போலீசாரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீவிரவாத தடுப்பு பிரிவு தமிழகத்தில் அமைப்பது தொடர்பாக காலப்போக்கில் உரிய தகவல் தெரிவிக்கப்படும்.

சென்னை விருகம்பாக்கத்தில் பெண் போலீசிடம் அத்துமீறி நடந்தவர்கள் மீது அன்றைய தினமே உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை நீங்கள் முதல் தகவல் அறிக்கையில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். அதன்பின்னர் உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்று பெண் போலீசாரிடம் தவறாக நடந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.


Next Story