சீர்காழியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள், தேவார செப்பேடுகள் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பு
சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோயிலில் பல சிலைகள், தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சட்டநாதர் கோயிலில், 32 ஆண்டுகளுக்குப்பின்னர், வரும் மே 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
யாகசாலை மண்டபம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக, கோயில் மேற்கு கோபுர வாயில் அருகே நந்தவனத்தின் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது, மண்ணில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, சோமஸ்கந்தர், அம்பாள் உள்ளிட்ட 22 சிலைகள் கிடைத்தன. மேலும், 55 பீடங்கள், பூஜை பொருட்கள் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பதிகம் தாங்கிய தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இவற்றை, ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் ஆகியோர் பார்வையிட்டனர். மீட்கப்பட்ட சிலைகள், கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைக்கப்பட்டுள்ளன.