சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஐஸ்கிரீம் கடைக்கு 'சீல்'


சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஐஸ்கிரீம் கடைக்கு சீல்
x

சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஐஸ்கிரீம் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி தெப்பக்குளம் மெயின் கார்டு கேட்டில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடையில் ஒருவர் ஐஸ்கிரீம் வாங்கியுள்ளார். அப்போது அந்த ஐஸ்கிரீமில் பல்லி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து அளித்த புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு அந்த ஐஸ்கிரீம் கடையில் ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்த கடை மிகவும் சுகாதாரமற்ற முறையிலும் கிருமி தொற்று ஏற்படும் வகையிலும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடையின் விற்பனை, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு, அந்த கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அந்த கடையில் 2 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் இதுபோன்று உணவு கலப்படம் சம்பந்தப்பட்ட புகார்களை 99449 59595, 95859 59595 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story