டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநில முழுவதும் அமல்படுத்த தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநில முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
நீலகிரி உள்ளிட்ட மலை மற்றும் காடு சார்ந்த மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மது பாட்டில்களில், 'ஈசி 10' என்னும் ஸ்டிக்கர் ஒட்டி 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யும் நடவடிக்கை கொண்டுவரப்பட்டது. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, நீலகிரியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். இந்த திட்டத்தை வகுத்து வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பாட்டில்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.