ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மதுரை டாக்டர்
முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வில் மதுரை டாக்டர் வெற்றி பெற்றார்.
மதுரை,
இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எப்.எஸ்), மற்றும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்) போன்ற பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டுக்கான இந்திய ஆட்சி பணிகளுக்கான தேர்வின் (சிவில் சர்வீசஸ்) முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில் மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த டாக்டர் தம்பதியரின் மகன் மதன் (வயது 25) என்பவர் 195-வது இடம் பெற்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை முடித்துவிட்டு முழு முயற்சியாக குடிமையியல் பணிக்காக தன்னை 2 வருடங்களுக்கு மேலாக தயார்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து மதன் கூறும்போது, " இந்திய குடிமையியல் பணியாளர் தேர்விற்கு கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக படித்தும் பயிற்சி பெற்றும் வந்தேன். மேலும் பெற்றோர் உறுதுணையாக இருந்தனர். அதனால் முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற முடிந்தது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. 195-வது இடம் கிடைத்த நிலையில் ஐ.பி.எஸ். பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இருந்தபோதிலும் ஐ.பி.எஸ். பயிற்சியின்போது தொடர்ந்து முயற்சி செய்து ஐ.ஏ.எஸ். பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதே தனது நீண்ட நாள் விருப்பமாக இருந்து வருவதால் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் ஆகும் வரை முயற்சி செய்து கொண்டிருப்பேன்" என்றார்.