"செய்யும் வேலை பிடிக்காவிட்டால் விலகிவிடுவேன்" மாணவர்களுடன் கலந்துரையாடலில் கவர்னர் பேச்சு
செய்யும் வேலை பிடிக்காவிட்டால் விலகிவிடுவேன் என்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
மண்டபம்,
ராமநாதபுரம் சென்றுள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மண்டபம் மரைக்காயர்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்றார். இதையொட்டி மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், கோலாட்டம், பறையாட்டம், காவடி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் நிகழ்ச்சிகளை கவர்னர் ஆர்.என்.ரவி பார்த்து ரசித்தார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டினார். மாணவ-மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து கலந்துரையாடினார். அப்போது கவர்னர் பேசியதாவது:-
திருப்தி கிடைக்காது
எந்த பணியில் இருந்தாலும் அதை திருப்தியுடன், ஆர்வமுடன் செய்ய வேண்டும். நான் செய்யும் பணிகள் எனக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த பணியைவிட்டு, உடனடியாக விலகிவிடுவேன். விருப்பம் இல்லாமல் எந்த பணியை செய்தாலும் திருப்தி கிடைக்காது. நாம் ஒவ்வொருவரும், கிடைக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டு வாழ வேண்டும்.
நேரத்தை திட்டமிடுவதால், எனக்கு அதிக வேலை இருப்பதாக தெரியவில்லை. மாணவர்களாக நீங்கள் சரியான திட்டமிடலுடன் படிக்க வேண்டும். குறிப்பாக வருங்காலத்தில் சட்டமா? கலைத்துறையா? ஆட்சிப்பணியா? என நீங்கள் எந்த துறையில் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்பதை இப்போதே இலக்காக நிர்ணயம் செய்து, அந்த இலக்கை அடைவதற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு அதற்கேற்றபடி படிக்க வேண்டும்.
சராசரியாக ஒரு நாளைக்கு 6-7 மணி நேரம் மட்டும் தூங்கினால் போதும். மற்ற நேரங்களை உடற்பயிற்சி, பொழுதுபோக்கு, படிப்பு போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும். அதிக நேரம் செல்போன், டி.வி. பார்ப்பதை மாணவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இளைஞர்களே எதிர்காலம்
கவர்னர் ஆவதற்கு தனி பயிற்சி கிடையாது. கவர்னரை நியமிப்பது என்பது அவரவரின் தகுதி அடிப்படையில், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஜனாதிபதியால் கவர்னர் நியமிக்கப்படுகிறார். கவர்னர் பதவிக்கு நான் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு கிடைத்தது இது ஒரு வாய்ப்புதான்.
மாணவர்களாகிய நீங்கள் எந்த துறையில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதோ அந்த துறையில் உயர் பதவிக்கு செல்லும் வகையில், படித்து சிறப்பான முன்னேற்றத்தை அடைய வேண்டும்.
மாணவர்கள், இளைஞர்கள்தான் இந்த தேசத்தின் எதிர்காலம். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள்தான் முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நவபாஷண கோவிலில் தரிசனம்
பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி உச்சிப்புளி நாகாச்சி பகுதியில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேவிப்பட்டினம் நவபாஷண கோவிலுக்கு சென்ற கவர்னர் அங்கு கடலுக்குள் உள்ள நவகிரகத்தை சுற்றி வந்து தரிசனம் செய்தார்.