'கலைஞர் எழுதுகோல் விருதை சி.பா.ஆதித்தனாரின் திருவடியில் சமர்ப்பிக்கிறேன்' ஐ.சண்முகநாதன் நெகிழ்ச்சி
ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விருதை சி.பா.ஆதித்தனாரின் திருவடியில் சமர்ப்பிக்கிறேன் என ஐ.சண்முகநாதன் தெரிவித்தார்.
சென்னை,
இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு 'தினத்தந்தி' பத்திரிகை ஆசிரியராக நீண்ட நெடிய ஆண்டுகளாக பணியாற்றி தற்போது வரை 'தினத்தந்தி' பணியில் இருந்து வரும் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (வயது 87) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கருணாநிதி பிறந்த நாளான நேற்று ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக ஐ.சண்முகநாதனுக்கு மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விருதினை பெற்றுக்கொண்ட ஐ.சண்முகநாதன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கினார். அப்போது ஐ.சண்முகநாதனின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமர்ப்பணம்
விருது பெற்றது குறித்து ஐ.சண்முகநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த விருதை பெறுவதற்கு முழு முதல் காரணமாக விளங்கி என்னை வளர்த்த 'தினத்தந்தி'க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விருதையும், இதன் மூலம் எனக்கு கிடைத்த புகழையும், பெருமையையும் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் திருவடியில் சமர்ப்பிக்கிறேன். இந்த நேரத்தில் சி.பா.ஆதித்தனாருக்கு எனது இதய அஞ்சலியை செலுத்தி மானசீகமாக ஆசி பெறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.