மனைவி, குடும்பத்தை கேவலமாக பேசியதால் கொன்றேன்
குடியாத்தம் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசியதால் கொன்றதாக கூறி உள்ளார்.
வாலிபர் கைது
குடியாத்தம் அடுத்த கள்ளூர் மதுராம்பிகை நகரை சேர்ந்தவர் ஹயாத்பாஷா (வயது 36), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 12-ந் தேதி கள்ளூர் காந்திநகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்தார்.
இந்த வழக்கில் கள்ளூர் நேருநகரை சேர்ந்த பாப்ஜான் மகன் ஹையாத்பாஷா (34) என்பவர் நேற்று குடியாத்தம் சீவூர் கிராம நிர்வாக அலுவலர் ரகு முன்னிலையில் சரணடைந்தார். குடியாத்தம் டவுன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
கேவலமாக பேசினார்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை கொலை செய்து ஜெயிலுக்கு சென்றேன். அந்த வழக்கிலிருந்து விடுதலை ஆனேன். பிறகு மனைவியை பிரிந்து எனது அம்மாவுடன் கள்ளூர் நேருநகரில் வசித்து வருகிறேன்.
குடிப்பழக்கம் காரணமாக மதுராம்பிகை நகரை சேர்ந்த அஸ்கர் மகன் ஹையாத்பாஷாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் போதையில் அடிக்கடி எனது மனைவியை அசிங்கமாக பேசுவார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுடுகாட்டுக்கு அருகில் மது அருந்தியபோது எனது மனைவி மற்றும் எங்கள் குடும்பத்தை தரக்குறைவாகவும், கேவலமாகவும் பேசியதால் தகராறு ஏற்பட்டது.
கொலை செய்தேன்
அதிலிருந்து கொஞ்ச நாள் இருவரும் சரியாக பேசாமல் இருந்தோம். ஆனாலும் ஹையாத்பாஷா என் மனைவி பற்றியும் என் குழந்தைகள் பற்றியும் ஊரில் போதையில் தவறாக பேசுவதாக கேள்விப்பட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த நான் என் மனைவி, குடும்பம் பற்றி பேசக்கூடாது என்று சொன்னேன். அதற்கு அப்படித்தான் பேசுவேன், உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
எனவே அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, ஏற்கனவே சுல்தான்பாஷாவை கொலை செய்தது போல், 11-ந் தேதி இரவு மது குடிக்க அழைத்து காலால் எட்டி உதைத்தேன். கீழே விழுந்ததும் தலையில் மிதித்தேன். பின்னர் மயக்கம் அடைந்ததும் சட்டை, பனியன், லுங்கியை கழட்டி அருகில் போட்டுவிட்டு மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தலைமீது தாக்கி கொலை செய்துவிட்டு, திருச்சி பக்கம் சென்று விட்டேன். பின்னர் செலவுக்கு என் அம்மாவிடம் பணம் வாங்க வந்தபோது போலீசார் என்னை தேடுவதை அறிந்து சரணடைந்தேன் என கூறி உள்ளார்.
ஏற்கனவே கொலை வழக்கில் கைதானவர்
கைது செய்யப்பட்ட ஹையாத்பாஷா கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் திருநகரை சேர்ந்த அப்சர் மகன் சுல்தான்பாஷா என்பவரை குடியாத்தம் சுண்ணாம்பேட்டை சுடுகாடு அருகில் அழைத்து சென்று தன்மனைவியுடன் கள்ளத்தொடர்பு உள்ளதாக சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.