ஆருத்ரா மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேட்டி


ஆருத்ரா மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேட்டி
x

நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

சென்னை,

ஆருத்ரா கோல்ட் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக்கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடியில் திரைப்பட நடிகர்- தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதை திரும்பப் பெறக்கோரி, ஆர்.கே. சுரேஷ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆருத்ரா மோசடிக்கும், தனக்கும் தொடர்பில்லை எனவும், மனைவி, குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக துபாயில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இதற்கிடையில் துபாயிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷிடம் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நீதிமன்ற உத்தரவின்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஆஜராக வந்திருப்பதாக அவர்களிடம் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார்.

அதன்படி, சென்னை அசோக் நகரில் உள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகர் ஆர்.கே.சுரேஷ் இன்று ஆஜராகினார். அவரிடம் ஏ.டி.எஸ்.பி.வேல்முருகன் விசாரணை மேற்கொண்டார். நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்கு பின்னர் நடிகர் ஆர்.கே.சுரேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஆருத்ரா மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் தலைமறைவாகவில்லை; உடல்நலக்குறைவு காரணமாக, மனைவி ஐ.சி.யு.வில் இருந்ததால் வெளிநாட்டில் இருந்து வந்தோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறேன்; நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story