"மணிரத்னத்தை பாராட்டுவதை ஒரு தமிழனின் கடமையாய் உணர்கிறேன்" - திருச்சி சிவா எம்.பி.


மணிரத்னத்தை பாராட்டுவதை ஒரு தமிழனின் கடமையாய் உணர்கிறேன் - திருச்சி சிவா எம்.பி.
x

குறைகாணும் குணத்துடன் படத்தைப் பார்க்காத காரணத்தால் ஏமாற்றமடையவில்லை என திருச்சி சிவா எம்.பி. கூறியுள்ளார்.

சென்னை,

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் குறித்தி தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"கல்லூரி படிப்பின்போதும், ஓராண்டு கால மிசா சிறைவாசத்தின்போதும் படித்த நூல் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'. முதல்முறை படித்து முடித்த பின் அதில் வரும் பாத்திரங்கள் நெஞ்சில் நிழலாட உறக்கம் தொலைத்த இரவுகளைப் போலவே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் `பொன்னியின் செல்வன்' படம் பார்த்த அன்றும் இரவு உறக்கம் இழந்தேன்.

இதற்கு மேல் இத்தனை பெரிய வரலாற்றுப் புதினத்தை திரையில் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்க இயலாது. எம். ஜி. ஆர் நினைத்து, கமல்ஹாசன் விரும்பி பல காரணங்களால் உருவாக முடியாத இந்தக் காவியத்தை திரைப்படமாக்கிய மணிரத்னத்தை பாராட்டுவதை ஒரு தமிழனின் கடமையாய் உணர்கிறேன்.

நூறு சதவீதம் முழுமை என்பதை எல்லாவற்றிலும் எதிர்பார்க்க முடியாது. எனக்கு தெரிந்து எழுத்து வடிவத்தில் பெரும் வரவேற்பினை பெற்ற பல கதைகள் திரையில் வெற்றி பெறாமல் போயிருக்கின்றன. அகிலன், ஜெயகாந்தன், சுஜாதா, ஏன் கல்கியும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. விமர்சனங்களை சந்திக்காத தலைவர்களும், படைப்புகளும் இருக்கவே முடியாது. ஆனால் பாராட்ட வேண்டியதை பாராட்டாமல் குறைகளை மட்டுமே சுட்டுவதை ஏற்கவும் இயலாது.

திரையில் வந்தியத்தேவனின், குறும்புத்தனம், திறமை, வீரம், காதல், சாமர்த்தியம் அத்தனையையும் நடிகர் கார்த்தி வெளிப்படுத்தியிருப்பது முதல் மகிழ்ச்சி. பின்னாளில் சக்கரவர்த்தியாய் பரிணமிக்க இருக்கும் இலக்கணக்கங்களை கொண்ட இந்நாள் இளவரசனாய் அருள்மொழிவர்மன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஜெயம் ரவியிடம் இத்தனை எதிர்பார்க்கவில்லை. `கல்கி' வெளிப்படுத்திய அத்தனை இலக்கணங்களையும் அடக்கமாக வெளிப்படுத்தும் நடிப்பு.

ஹெலன் ஆஃப் ட்ராயாய் போல், கிளியோபாட்ராவை போல் மனம் மயக்கும் நந்தினியைப் போல் என்றாவது ஒருநாள் யதார்த்தத்தில் யாரையாவது காண இயலுமா என்று மனம் ஏங்கியதுண்டு. அத்தகைய நந்தினியாக உலக அழகி ஐஸ்வர்யா ராயை கண்ணெதிரே கொண்டு நிறுத்திய மணிரத்னத்திற்கு நன்றி சொல்ல வேண்டும்.

குந்தவையாய் த்ரிஷா, பெரிய பழுவேட்டரராய் சரத்குமார், சின்ன பழுவேட்டராய் பார்த்திபன், சுந்தர சோழராய் பிரகாஷ்ராஜ், ஆழ்வார்க்கடியானாக ஜெயராம், ஆதித்த கரிகாலனாய் விக்ரம் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

குறைகாணும் குணத்துடன் படத்தைப் பார்க்காத காரணத்தால் ஏமாற்றமடையவில்லை. பல பேரின் பலநாள் ஏக்கத்தினைப் போக்க முன்வந்து அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றிருக்கும் இயக்குநர் மணிரத்தினத்தை என் உணர்வு கொண்டோரின் சார்பாக பாராட்ட விரும்புகிறேன்.

படம் பார்த்து நெருக்கமான சிலரோடு பகிர்ந்து கொள்வதோடு நிறுத்தமால் இதை எழுத நேர்ந்ததற்குக் காரணம், பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் சில எதிர்மறை விமர்சனங்களை படிக்க நேர்ந்ததால்தான். கட்டிய வீட்டிற்கு குற்றம் சொல்ல ஆட்களுக்கா பஞ்சம்?

எங்கள் கொள்கைகளுக்கு முரண்படும் எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களை இந்தப் படத்தில் நான் ரசித்தேன். கலைப் படைப்பினில் தனிமனித விருப்பு வெறுப்புகளைக் கொண்டு பார்வையிடுவது ஏற்புடைய குணமல்ல என்பதை உணர்ந்தவன் நான்.

மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர் என்ற அடிப்படையில் இந்தப் படைப்பின் சிறப்புகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு விமர்சனங்கள் வைக்கப்படுவதை பார்க்க நேர்ந்தது. காந்தியையும், அண்ணாவையுமே விமர்சித்த உலகம் இது. எனவே இதில் விசித்திரம் ஏதுமில்லை.

சிலர் கைவிட்ட முயற்சியினை, பலர் முயல முன்வராத இந்தப் பெரும் படைப்பிற்கான முனைப்பிற்கும், உழைப்பிற்கும், வெளிச்சத்திற்கு வராத தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைக்கும் பாராட்டாமல் இருப்பதை குற்றமாய் உணர்கிறேன். இதற்கும் விமர்சனம் வரக்கூடும். அதையும் உணர்ந்தே இந்தப் பதிவு."

இவ்வாறு திருச்சி சிவா கூறியுள்ளார்.


Next Story