எங்கே தொலைத்தாரோ தெரியவில்லை; ரூ.2 லட்சம் செல்போனை தேடி அலையும் நடிகை


எங்கே தொலைத்தாரோ தெரியவில்லை; ரூ.2 லட்சம் செல்போனை தேடி அலையும் நடிகை
x

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த நடிகை தனது ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போனை தொலைத்து விட்டு, தொலைத்த இடம் தெரியாமல் தேடி அலைகிறார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் ருசிகரமாக பேசப் படுகிறது.

சென்னை,

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் உள்பட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு என்ற ஷாம்லி. இவர் சமூகவலைதளங்களில் தனது கருத்துக்களை அடிக்கடி பதிவிட்டு, எப்போதும் பரபரப்பாக பேசப்படுபவர். இவர் சென்னை புரசைவாக்கம், வைக்கோகாரன் தெருவில் வசிக்கிறார். இவர் கடந்த 9-ந் தேதி அன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் சூளைமேட்டில் உள்ள தனது தோழி வீட்டில் இரவு தங்கி உள்ளார்.

காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐபோனை காணவில்லை. எங்கு அந்த செல்போன் தொலைந்தது என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முதலில் போலீசுக்கு போகாமல் அவரே செல்போனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.

தேடுகிறார்... தேடுகிறார்

நட்சத்திர ஓட்டலுக்கு சென்று கேமரா பதிவு காட்சிகளை ஆராய்ந்து பார்த்தார். அதில் செல்போனை யாரும் எடுக்கும் காட்சி பதிவாகவில்லை. சூளைமேட்டில் தான் தங்கிய தோழி வீட்டிலும் தேடிப்பார்த்தார். அங்கும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. ரூ.2 லட்சம் மதிப்புள்ள அந்த செல்போனை சமீபத்தில் தான் நடிகை ஷாம்லி வாங்கி இருக்கிறார்.

எந்த துப்பும் கிடைக்காமல் அலை ந்து அலுத்து போன நிலையில், நடிகை ஷாம்லி பட்டினப்பாக்கம் போலீஸ் உதவியை தற்போது நாடி இருக்கிறார். அங்கு புகார் கொடுத்து சி.எஸ்.ஆர்.ரசீது பெற்றார் போலீசார் ஒருபக்கம் செல்போனை தேடுகிறார்கள். ஷாம்லியும் தொடர்ந்து தேடுகிறார். நட்சத்திர ஓட்டல் விருந்து நிகழ்ச்சி மற்றும் சூளைமேட்டில் தன்னுடன் தங்கி இருந்தவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர் பட்டியலை போலீசில் கொடுத்துள்ளார். பெயர் பட்டியலில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். நடிகை ஷாம்லி செல்போனை தொலைத்து விட்டு தானாகவே களத்தில் இறங்கி தேடுவதை போலீஸ் வட்டாரத்தில் ருசிகரமாக பேசப்படுகிறது.


Next Story