"ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன்.." - சீமான்
திருமாவளவன் தனது நிலைப்பாட்டில் இனிமேலாவது உறுதியாக இருக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை,
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கோவை அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். அன்னபூர்ணா உரிமையாளர் நேரில் வரவழைத்து மிரட்டப்பட்டுள்ளார். தவறாக வீடியோ வெளியிட்ட அண்ணாமலை, மன்னிப்பு கேட்டதை வரவேற்கிறேன். இலங்கை தமிழர்களை கொல்ல இந்திய பிரதமர்கள் பல கோடிகளை கொட்டி கொடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு மீனவர்கள் என்பதால் யாரும் பேசுவதில்லை. குஜராத் மீனவர்கள் என்றால் மத்திய அரசு சும்மா விட்டு விடுமா?
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன். மது ஒழிப்பு கூட்டணியோடு, திருமாவளவன் அணி சேர வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் நிலைப்பாட்டில் திருமாவளவன் பின் வாங்காமல் இருக்க வேண்டும்.
நான் கட்சி துவங்கிய போது பல இன்னல்களை சந்தித்தேன். விஜய் தற்போது தான் கட்சி துவங்கி உள்ளார். அவர் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டும். இன்னல்களை தாண்டி தான் கட்சி நடத்த வேண்டி உள்ளது. வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழ்நாட்டில் செயல்பட்ட பல நிறுவனங்கள், ஏன் தமிழகத்தை விட்டு வெளியேறின? 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூடிய 60 வேட்பாளர்களை அறிவித்து உள்ளேன்" என சீமான் கூறினார்.