"நானும் கிறிஸ்தவன் தான்".. "இத சொன்னா அவங்களுக்கு எரியும்".. உதயநிதி பரபரப்பு பேச்சு
தானும் கிறிஸ்தவன் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 2 ஆயிரம் குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபு, மற்றும் மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "திராவிட மாடல் என்றால் என்ன..? என எல்லாரும் கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இங்கு "அல்லேலூயா" என வாழ்த்து சொல்லுவது தான் திராவிட ஆட்சி. அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார்.
இது தான் சமூக நீதி ஆட்சி இதை தான் பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் எங்களுக்கு கற்று கொடுத்தது. அந்த ஆட்சியைதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.
சேகர்பாபு அல்லேலுயானு சொல்றாரு. உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும். நானும் கிறிஸ்துவன் என சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் படித்தது ஒரு கிறிஸ்துவ பள்ளியில். சமூக நல்லிணக்கத்தோடு அமைச்சர் சேகர் பாபு எவ்வாறு செயல்படுகிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி. தேர்தலுக்காக மட்டும் இந்த நலத்திட்ட உதவிகள் அல்ல, தொடர்ந்து வருடம் முழுவதும் மக்கள் பணியே முதல் பணி என பணியாற்றி வருகிறேன்.
கடந்த வருட மழையில் சாலைகளில் மழை நீர் நின்றது. அதற்கு காரணம் கடந்த ஆட்சியின் விளைவு. ஆனால் இந்த ஆட்சியில் மாண்டாஸ் புயலின் போது எங்கும் மழை நீர் நிற்கவில்லை. அதற்கு அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியாவுக்கு நன்றி.
கடந்த 4 நாட்களாக பத்திரிக்கையாளர்களுக்கு நான் தான் தீனியாகி கொண்டிருக்கிறேன். முதலில் அமைச்சர் பொறுப்பு கொடுக்கும்போது எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் என்னை வழிநடத்த அமைச்சர் சேகர்பாபு போன்ற பல அண்ணன்கள் அமைச்சரவையில் இருப்பதால் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக இந்தியா டுடே கருத்து கணிப்பு கூறியுள்ளது. அதற்கு முதல்-அமைச்சரின் அயராத உழைப்பு மட்டும் திட்டங்கள் தான் காரணம்" என்று உதயநிதி ஸ்டானின் கூறினார்.