பெண்ணை சரமாரி வெட்டிக்கொன்ற கணவர்; கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்


பெண்ணை சரமாரி வெட்டிக்கொன்ற கணவர்; கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடம் அருகே பெண் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கள்ளத்தொடர்பை கண்டித்ததால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி

திருவேங்கடம்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியார்புரத்ைத சேர்ந்தவர் மகாகிருஷ்ணன் (வயது 40), வேன் டிரைவர். இவருடைய மனைவி கனகாதேவி (32). இவர்களுக்கு முத்துலட்சுமி (14), கவின் (7) என்று 2 பிள்ளைகள் உள்ளனர்.

மகாகிருஷ்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு திருமணம் ஆன பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை கனகாதேவி கண்டித்ததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் மகாகிருஷ்ணன் மீது அவரது கள்ளக்காதலி குடும்பத்தினர் நேற்று முன்தினம் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மகாகிருஷ்ணனை அழைத்து விசாரணை நடத்தி, அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் அடைந்த மகாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றதும், மனைவி கனகாதேவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

நேற்று அதிகாலையில் அப்பகுதியில் ஒரு பிச்சிப்பூ தோட்டத்தில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் அடையாளம் தெரியாதபடி சிதைக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து குருவிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கனகாதேவி என்பதும், அவரை கணவர் மகாகிருஷ்ணனே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கனகாதேவி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மகாகிருஷ்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, கொலை செய்யப்பட்டு கிடந்த கனகாதேவியின் உடலை பார்த்து அவரது பிள்ளைகள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை அவரது கணவரே வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story